Last Updated : 12 Jun, 2020 08:04 AM

 

Published : 12 Jun 2020 08:04 AM
Last Updated : 12 Jun 2020 08:04 AM

லாக்டவுன் காலத்தில் ஊழியர்களுக்கு முழுஊதியம் தர வேண்டும் எனும் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

லாக்டவுன் காலத்தில் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் முழு ஊதியம் தர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மார்ச் 29-ம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக பல்வேறு நிறுவனங்கள் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை முடிந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது

லாக்டவுன் காலத்தில் நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு பிடித்தமின்றி முழு ஊதியம் வழங்க வேண்டும் என 2005-ம் ஆண்டு தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி மத்திய உள்துறைஅமைச்சகம் கடந்த மார்ச் 29-ம் தேதி அறிவித்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன், எஸ்.கே. கவுல், எம்ஆர் ஷா ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்டது.

இந்த வழக்கை கடந்த மே மாதம் 15-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், அடுத்த இரு வாரங்களுக்கு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தடை விதித்து, மத்திய அரசு பதில் அளிக்கக் கோரியிருந்தது. இந்த சூழலில் மார்ச் 29-ம் தேதி பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றது.

இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் பிரமாணப் பத்திரம் கடந்த 4-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில், “கடந்த மார்ச் 29-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவு அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது அல்லது. அந்த உத்தரவை தற்காலிகமான நடவடிக்கைதான் பிறப்பித்தோம், நிரந்தரமானது அல்ல.

அந்த உத்தரவும் திரும்பப் பெறப்பட்டாலும், பிறப்பிக்கப்பட்ட நோக்கம் லாக்டவுன் காலத்தில் ஒப்பந்த ஊழியர்களும், தொழிலாளர்களும் ஊதியமில்லாத சூழலுக்கு ஆட்படக்கூடாது என்பதற்காகவே அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பொதுநலன் கருதி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் தேசிய நிர்வாகக்குழு எடுத்த முடிவாகும். இந்த உத்தரவைப் பிறப்பிக்க தேசிய நிர்வாகக் குழுவுக்கு முழு அதிகாரம் இருக்கிறது.

நிறுவனங்கள், தொழிற்சாலைகளால் முழுமையான ஊதியத்தை தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் வழங்க முடியாத சூழலில் இருந்தால் பரவாயில்லை. அதற்கான ஆதாரங்களை அதாவது தங்களால் ஊதியம் வழங்க முடியாத சூழலில் இருக்கிறோம் என்பதற்கான ஆதாரத்தை நிறுவனங்கள் தங்களின் பேலன்ஸ் ஷீட்டிலும், வரவு செலவுக் கணக்கிலும் குறிப்பிட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்” எனத் தெரிவித்திருந்தது.

இந்த வழக்கில் எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்காமல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு வரும் ஜூன் 12-ம் தேதி வரை நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கக்கூடாது என கடந்த 4-ம் தேதி உத்தரவிட்டு இந்த வழக்கின் மீதான தீர்ப்பு ஒத்தி ஒத்திவைத்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x