

டெல்லி முன்னாள் சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தி என்னை இரு முறை கொல்ல முயன்றார் என அவரது மனைவி லிபிகா மித்ரா, குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜாராகி வாக்குமூலம் கொடுத் துள்ளார்.
ஆம் ஆத்மி அரசில் சட்ட அமைச்சராக பதவி வகித்தவர் சோம்நாத் பாரதி. இவரின் மனைவி லிபிகா மித்ரா, சோம்நாத் பாரதி மீது குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழும், மன ரீதியாக துன்புறுத்திய தாகவும் டெல்லி மகளிர் ஆணையம் மற்றும் துவாரகா வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் நேற்று முன்தினம் ஆஜரான லிபிகா, தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார்.
அதில், ‘சோம்நாத் பாரதி குழந்தைகள் முன்னிலையில் கூர்மையான ஆயுதத்தால் என் மணிக்கட்டில் குத்தி காயம் ஏற்படுத்தினார். உடல் ரீதியாக வும் துன்புறுத்தினார். அவரின் வன்முறைச் செயலால் என் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள் ளனர். வீட்டு வாடகை செலுத்த நான் பணம் கேட்டபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அவர் பல முறை என்னை அறைந்துள்ளார். மேலும், மார்ச் 19, 2013 அன்று, நான் 7 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையிலும் குரல்வளையை நெறித்து கொல்ல முயன்றார். பின்னர் நாயை என் மீது ஏவி விட்டார். நாய் என் மீது பாய்ந்து கடித்துக் குதறியபோது அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். என் வயிறு மற்றும் அந்தரங்கப் பகுதிகளில் நாய் கடித்து விட்டது’ என தெரிவித்துள்ளார்.
மேலும், இரண்டு முறை காவல் துறையின் உதவியை நாடியதையும் தனது வாக்கு மூலத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். சோம்நாத் பாரதியும் அவரது தாயும் உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தியபோது காவல் துறையை லிபிகா அணுகியுள்ளார். ஒருமுறை தன்னை தன் கணவர் வசந்த்கஞ்ச்சில் உள்ள வீட்டில் அடைத்து வைத்திருப்பதாகக் கூறி காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து உதவி கோரியுள்ளார். இந்த சம்பவங்களையும் அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித் துள்ளார்.
இதுதொடர்பாக மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “நாயை ஏவி விட்டு கடிக்க விட்டதற்கான ஆதாரங்களை லிபிகா தாக்கல் செய்துள்ளார். லிபிகாவின் பக்கத்து வீட்டாரின் சாட்சிகளையும் நாங்கள் பதிவு செய்துள்ளோம். சோம்நாத் பாரதி நாயை ஏவி விட்டு கடிக்கச் செய்து பார்த்தது, அதுதொடர்பாக லிபிகா அனுப்பிய மின்னஞ்சல் ஆகிய சாட்சிகள், சோம்நாத் பாரதி குற்றம் செய்ததை நீதிமன்றத்தில் நிரூபிக்க போதுமானவை” என தெரிவித்துள்ளார்.
லிபிகாவும், ஆம் ஆத்மி எம்எல்ஏ.வான சோம்நாத் பாரதிக்கும் கடந்த 2010ல் திருமணமானது. அவர் பொய்யான தகவல்களைக் கூறி தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக லிபிகா புகார் தெரிவித்துள்ளார்.