சமத்துவபுரம் பாணியில் 'மக்கள் கிராமம்' திட்டம்: கேரளத்தில் ஜூன் 13-ம் தேதி ராகுல் காந்தி திறந்து வைக்கிறார்

ராகுல்காந்தி தொடங்கி வைக்க உள்ள மக்கள் கிராமம்
ராகுல்காந்தி தொடங்கி வைக்க உள்ள மக்கள் கிராமம்
Updated on
1 min read

தமிழகத்தில் அனைத்து சாதி, மத மக்களும் சேர்ந்து வசிக்கும் 'சமத்துவபுரம்' போல் கேரளத்தின் வயநாட்டில் 'மக்களின் கிராமம்' என்னும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கென கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி ஜூன் 13-ம் தேதி காணொலி மூலம் திறந்துவைக்கிறார்.

கடந்த 2018-ம் ஆண்டு கேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு பெருமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பெருமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் வயநாடு மாவட்டம் பனைமரம் கிராமமும் ஒன்று.

அப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிடச் சென்ற 'ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த்' என்னும் அமைப்பின் கேரள மாநில நிர்வாகிகள், முற்றிலும் மண்ணுக்குள் புதைந்த 25 வீடுகளைத் திரும்பக் கட்டித் தருவதாகச் சொல்லி அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் அளித்தனர்.

அதன் தொடர்ச்சியாக செயலிலும் இறங்கினர். கடந்த சில மாதங்களுக்கு முன்பே 'ஜமாத் இ இஸ்லாமி ஹிந்தின்' சேவை பிரிவான 'பீப்பிள்ஸ் ஃபவுண்டேஷன்' சார்பில் புதிய வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்றன. இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஓராண்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்த வீடுகள் கடந்த மார்ச் மாதமே பயனாளிகளுக்கு ஒப்படைக்க இருந்த நிலையில் கரோனா பாதிப்பு காரணமாக தள்ளிப்போனது.

ராகுல் காந்தி: கோப்புப்படம்
ராகுல் காந்தி: கோப்புப்படம்

இன்னும்கூட கரோனா பாதிப்பு ஓய்ந்துவிடாத நிலையில், அந்த வீடுகளில் வசித்து வந்தவர்கள் நிரந்தர வீடின்றி வெளியில் தங்கி, வாடகையும் கொடுக்க முடியாமல் சிரமப்படுவதை உணர்ந்த 'பீப்பிள்ஸ் ஃபவுண்டேஷன்' அமைப்பின் நிர்வாகிகள் ஆன்லைன் மூலம் திறப்பு விழா நடத்தத் தீர்மானித்தனர்.

இதையடுத்து நாளை மறுநாள் (ஜூன் 13), 'ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த்' அமைப்பின் தேசியத் தலைவர் சையத் ஸஆததுல்ல ஹஸ்னி தலைமையில் காணொலி மூலம் வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி திட்டத்தைத் தொடங்கி வைத்து அந்த வீடுகளை பயனாளிகளுக்கு ஒப்படைக்கிறார்.

நூலகம், ஆரோக்கிய மையம், பாலர் பள்ளி வசதியுடன் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இணைந்து வசிக்கப்போகும் இந்தக் குடியிருப்புக்கு 'மக்கள் கிராமம்' என்று பெயர் சூட்டியுள்ளனர். சாதி, மதம் கடந்து அனைத்துத் தரப்பு மக்களும் சகோதரத்துவத்துடன் கூடி வாழும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள 'மக்கள் கிராமம்' வயநாடு பகுதி மக்களைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in