Last Updated : 11 Jun, 2020 11:32 AM

 

Published : 11 Jun 2020 11:32 AM
Last Updated : 11 Jun 2020 11:32 AM

ஒரேநாளில் ஏறக்குறைய 10 ஆயிரம் பேர் கரோனாவில் பாதிப்பு: உயிரிழப்பு 8 ஆயிரத்தைக் கடந்தது; கடந்த 10 நாட்களில் மூன்றில் ஒரு பகுதி

கரோனா வைரஸால் தொடர்ந்து 4-வது நான்காவது நாளாக ஏறக்குறைய 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில்லாத வகையில் 357 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸுக்கு நாடு முழுவதும் 9 ஆயிரத்து 996 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 357 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 86 ஆயிரத்து 579 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 448 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 28 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்து செல்வோர் வீதம் 49.21 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 357 பேர் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 8 ஆயிரத்து 102 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் நேற்று மட்டும் 149 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து டெல்லியில் 79 பேர், குஜராத்தில் 34 பேர், உத்தரப் பிரதேசத்தில் 20 பேர், தமிழகத்தில் 19 பேர், மேற்கு வங்கத்தில் 17 பேர், தெலங்கானாவில் 8 பேர், மத்தியப் பிரதேசம், ஹரியாணாவில் தலா 7 பேர், ராஜஸ்தானில் 4 பேர், ஜம்மு காஷ்மீர், கர்நாடகாவில் தலா 3 பேர், கேரளா, உத்தரகாண்டில் தலா இருவர், ஆந்திரா, பிஹார், இமாச்சலப் பிரேசத்தில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.

ஒட்டுமொத்தமாக தேசிய அளவில் கரோனா பாதிப்பு 2.86 லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த 10 நாட்களில் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதி எண்ணிக்கை வந்துள்ளது. ஜூன் 1-ம் தேதி முதல் தொடர்ந்து 9 ஆயிரம் பேருக்கு குறைவில்லாமல் கரோனாவில் பாதிக்கப்பட்டு ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல ஒட்டுமொத்த உயிரிழப்புகளில் மூன்றில் ஒரு பகுதியும் கடந்த 10 நாட்களில் நடந்துள்ளது. கடந்த ஜனவரி 30-ம் தேதி முதல் கரோனா நோயாளி இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அதன்பின் 100 நாட்களுக்குப் பின் மே 18-ம் தேதி இந்தியா ஒரு லட்சம் கரோனா நோயாளிகளை எட்டியது. ஆனால், அடுத்த ஒரு லட்சம் கரோனா நோயாளிகள் 2 வாரங்களிலும், கடந்த 10 நாட்களில் ஏறக்குறை 90 ஆயிரத்துக்கும் மேல் கரோனா பாதிப்பு ஏற்பட்டு 3 லட்சத்தை இந்த வாரம் எட்ட உள்ளது.

உலக அளவில் கரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வுகளின் படி இந்தியா 5-வது இடத்தில் இருக்கிறது. பிரிட்டனுக்கும், இந்தியாவுக்கும் இடையே சிறிது இடைவெளிதான் இருப்பதால், அடுத்து வரும் நாட்களில் 4-வது இடத்துக்கு இந்தியா முன்னேறும்.

உலக அளவில் அதிகமான உயிரிழப்புகளைச் சந்தித்த நாடுகளில் இந்தியா 12-வது இடத்திலும், குணமடைந்தோர் நாடுகளின் பட்டியலில் 9-வது இடத்திலும் இருக்கிறது.

கடந்த 24 மணிநேரத்தில் நிகழ்ந்த 266 உயிரிழப்புகளில் மகாராஷ்டிராவி்ல் 109 பேர், டெல்லியில் 62 பேர், குஜராத்தில் 31, தமிழகத்தில் 17 பேர், ஹரியாணாவில் 11 பேர், மேற்கு வங்கத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் 8 பேர், ராஜஸ்தானில் 6 பேர், ஜம்மு காஷ்மீரில் 4 பேர், கர்நாடகாவில் 3 பேர், பஞ்சாப், மத்தியப் பிரதேசத்தில் தலா இருவர், கேரளா, பிஹாரில் தலா ஒருவர் உயிரிழந்தனர்

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 3,438 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் உயிரிழப்பு 1,347 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 427 ஆகவும் அதிகரித்துள்ளது. மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 432 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியில் உயிரிழப்பு 984 ஆகவும், ராஜஸ்தானில் பலி எண்ணிக்கை 259 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பலி எண்ணிக்கை 326 ஆக அதிகரித்துள்ளது. தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 156 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 321 ஆகவும், ஆந்திராவில் 78 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 69 பேரும், பஞ்சாப்பில் 55 பேரும் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 51 பேரும், ஹரியாணாவில் 52 பேரும், பிஹாரில் 33 பேரும், ஒடிசாவில் 9 பேரும், கேரளாவில் 18 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 6 பேரும், ஜார்க்கண்டில் 8 பேரும், உத்தரகாண்டில் 15 பேரும், அசாமில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். மேகாலயாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 94,041 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 44,517 ஆக உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 841 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 19,333 ஆகவும் அதிகரித்துள்ளது.

3-வது இடத்தில் உள்ள டெல்லியில் 32,810 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12,845 பேர் குணமடைந்துள்ளனர். 4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 21,521 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 14,735 பேர் குணமடைந்தனர்.

ராஜஸ்தானில் 11,600 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 10,049 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 11,610 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 9,328 பேரும், ஆந்திராவில் 5,269 பேரும், பஞ்சாப்பில் 2,805 பேரும், தெலங்கானாவில் 4,111 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 4,285 பேர், கர்நாடகாவில் 5,760 பேர், ஹரியாணாவில் 4,854 பேர், பிஹாரில் 5,202 பேர், கேரளாவில் 2,005 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 814 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒடிசாவில் 3,250 பேர், சண்டிகரில் 327 பேர் , ஜார்க்கண்டில் 1,489 பேர், திரிபுராவில் 895 பேர், அசாமில் 3,092 பேர், உத்தரகாண்டில் 1,562 பேர், சத்தீஸ்கரில் 1,262 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 4,251 பேர், லடாக்கில் 115 பேர், நாகாலாந்தில் 128 பேர், மேகாலயாவில் 44 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் 127 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 53 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 93 பேர், சிக்கிமில் 13 பேர், மணிப்பூரில் 311 பேர், கோவாவில் 387 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அருணாச்சலப் பிரதேசத்தில் 57 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தமான் நிகோபர் தீவுகளில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x