

கரோனா வைரஸ் விவகாரத்தில் டெல்லி துணைநிலை ஆளுநரின் உத்தரவுக்கு கட்டுப்படுவோம் என டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கரோனா வைரஸ்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்துகரோனாவால் பாதிக்கப்படுவோரில் டெல்லியில் வசிப்பவர்களுக்கு மருத்துவமனைகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அரசு முடிவு செய்தது. ஆனால், இந்த முடிவை துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் ரத்து செய்தார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவால் தன்னைதானே தனிமைப்படுத்தி கொண்டுள்ள முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று ஆன்லைன் மூலமாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரோனா வைரஸ் தொற்று விவகாரத்தில், டெல்லி அரசின் உத்தரவை ரத்து செய்த துணைநிலை ஆளுநரின் உத்தரவு பின்பற்றப்படும். இது அரசியல் செய்வதற்கான நேரம் இல்லை.
தற்போது ஏற்பட்டுள்ளது எதிர்பாராத சவால், ஜூலை 15-ம் தேதி வாக்கில் டெல்லியில் 33 ஆயிரம் படுக்கை வசதிகள் தேவைப்படும். மேலும் வெளியில் இருந்துவந்தவர்களை சேர்த்தால் 65 ஆயிரம் படுக்கை வசதி தேவைப்படும். ஜூலை 31-ல் சுமார் 1.5 லட்சம் படுக்கை வசதிகள் தேவைப்படும். இதில் டெல்லிவாசிகளுக்கு மட்டும்80 ஆயிரம் படுக்கைகள் தேவைப்படும்.
எனவே, ஸ்டேடியம், விருந்துநடக்கும் அரங்குகள், ஓட்டல்களில் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறோம். டெல்லி நகரில் உள்ள மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதிகள் உள்ளதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்குத் தேவையான உதவிகளை டெல்லி அரசு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.