

கரோனா வைரஸ் தொடர்பான ஊரடங்கை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. ஜூன் 8 முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நிபந்தனைகளுடன் பக்தர்களை அனுமதிக்க, சோதனை அடிப்படையிலான 3 நாள் வெள்ளோட்டம் 8-ம் தேதி தொடங்கியது. தேவஸ்தான ஊழியர்கள் மற்றும்உள்ளூர் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் 6,000 முதல் 6,500 பேர் வரை சுவாமியை சமூக இடைவெளியுடன் தரிசித்தனர். இன்றுடன் வெள்ளோட்டம் நிறைவு பெறுகிறது.
நாளை காலை 6.30 முதல் 7.30 மணி வரை விஐபி தரிசனமும் பிறகு இலவச சர்வ தரிசனமும் தொடங்குகிறது. இதில் சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் போன்ற விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தினமும் 200 பக்தர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படும். இதில் யாருக்காவது கரோனா தொற்று இருந்தால் அவர்கள் உடனடியாக தேவஸ்தான சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விடுவர். எனவே அதற்கும் பக்தர்கள் தயாராக வர வேண்டும் என தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.
ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்கள் ஆன்லைன் மூலம் தினமும் 3000 வரை வழங்கப்பட உள்ளது. இலவச தரிசன டோக்கன் வழங்க
திருப்பதியில் 18 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
திருப்பதியில் விஷ்ணு நிவாசம் (8 மையங்கள்), ஸ்ரீநிவாசம் (6 மையம்), அலிபிரி பூதேவிகாம்ப்ளக்ஸ் (4 மையம்) ஆகிய இடங்களில் இலவச தரிசன டோக்கன்களை பெறலாம். இந்த டோக்கன்களை பக்தர்கள் 1 நாள் முன்னதாக வந்து பெற்றுக்கொள்ள வேண்டும். திருமலையில் தேவஸ்தான விடுதிகளில் 2 பக்தர்களுக்கு ஒரு தங்கும் அறை வீதம் வழங்கப்பட உள்ளது.