

கரோனா நோய்த் தொற்றுக்கு இதுவரை துணை ராணுவப்படையில் மொத்தம் 55 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் இன்று பலியானார் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, மத்திய தொழில் பாதுகாப்புப் படைப்பிரிவில் 5 பேரும், மத்திய ஆயுதப்படைப் பிரிவில் 13 பேரும் உயிரிழந்துள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தைச் சேர்ந்த சவுத்திரி நரசிங் பாய், மத்திய தொழில் பாதுகாப்புப் பிரிவின் முதலாவது பட்டாலியனில் பணியாற்றி வந்தார். சமீபத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார்.
விமான நிலையங்கள், விண்வெளி நிலையங்கள், அணுமின்நிலையம், அணு ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர்தான் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே சிஆர்பிஎப் பிரிவில் 4 வீரர்கள், எல்லைப் பாதுகாப்புப் படைப் பிரிவில் இருவர், சாஸ்த்திர சீமா பால் (எஸ்எஸ்பி), இந்தோ-திபெத்திய போலீஸ் படையில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.
கடந்த 6-ம் தேதி வரை துணை ராணுவப்படையில் 1,670 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இதில் சிஏபிஎப் வீரர்கள் 5 பேர், தேசிய பாதுகாப்பு படையில் 5 பேர், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த 6-ம் தேதி வரை 1,157 வீரர்கள் குணமடைந்துள்ளனர். 510 பேர் நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.