

கரோனா காலத்திலும் ஓட்டுப்பசி, அதிகாரப் பசி எடுத்து பாஜகவினர் அலைகிறார்கள் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மெய்நிகர் பேரணி பேச்சை அடுத்து திரிணமூல் காங்கிரஸ் கடுமையாகப் பதிலடி கொடுத்துள்ளது.
ஏற்கெனவே பிஹாரில் இத்தகைய பேரணியில் அமித் ஷா பேசியதைக் கேட்டு ராஷ்ட்ரிய ஜனதாதளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக அமித் ஷாவையும் பாஜகவையும் நிதிஷ் குமார் தலைமை ஆட்சியையும் விமர்சித்ததது குறிப்பிடத்தக்கது. பதவிக்காக எப்போதும் குறிவைக்கும் அரசியல் கழுகுகள் என்று இவர்களை தேஜஸ்வி யாதவ் வர்ணித்தார்.
இந்நிலையில் சிஏஏ எதிர்ப்பு, ஷ்ரமிக் ரயில்களில் வந்த புலம்பெயர் தொழிலாளர்களை இழிவு படுத்தும் விதமாக கரோனா எக்ஸ்பிரஸ் என்று மம்தா கூறியதை விமர்சித்து அமித் ஷா, இந்த இரண்டு கருத்துக்களுக்காக மம்தா வரும் தேர்தலில் அரசியல் அகதியாக்கப்படுவார் என்று அமித் ஷா காட்டமாக விமர்சித்தார்.
இந்நிலையில் திரிணமூல் மூத்த தலைவர் பார்த்தா சாட்டர்ஜி, “அமித் ஷாவின் முன்னுரிமைகள் என்ன என்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது. மாநிலமே கரோனா மக்கள் பெருந்தொற்றுடனும், இயற்கைப் பேரிடராலும் பெரிய அளவில் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது வெறும் ஓட்டுப்பசியுடன் இருக்கும் இவரது (அமித் ஷா) முகத்தை மக்கள் நினைவில் கொள்வார்கள்.” என்று சாடினார்.
மேலும் திரிணமூல் ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவின் அனைவரையும் உள்ளடக்கும் தன்மையை அபாயத்திற்குள்ளாக்கியவர்தான் இந்த அமித் ஷா, இப்போது வங்காளத்தின் பண்பாட்டை மீட்கிறாராம். வித்யாசாகரின் சிலையை இவர்கள்து ஆட்கள் உடைத்த போது மம்தா பானர்ஜிதான் அதை மீட்டெடுத்தார் என்பதை அவர் நினைவில் இல்லை போலும்” என்று சாடியுள்ளனர்.