

ஜன்சம்வத் மெய்நிகர் பேரணியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சிஏஏ எனும் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்ததற்காகவும் ஷ்ராமிக் ரயில்களை கரோனா எக்ஸ்பிரஸ் என்று வர்ணித்து தொழிலாளர்களை இழிவுபடுத்தியதற்காகவும் அரசியல் அகதியாக்கப்படுவார் மம்தா பானர்ஜி என்று தாக்கிப் பேசினார்.
“பெங்காலுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். சிலரை திருப்தி செய்யும் முந்தைய ஆட்சியின் அரசியலில் பிற நாடுகளில் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிரான வரலாற்று முடிவுதான் சிஏஏ. அன்று நான் மம்தாவின் முகத்தைப் பார்த்தேன், அவர் எரிச்சலடைந்தார், அவர் முகம் சிவந்தது. அவர் கோபம் எந்த அளவுக்கு போனதென்றால் அவர் நாகரிகத்தை மறக்கும் அளவுக்குப் போனது. அவர்கள் இவருக்கு என்ன தவறிழைத்து விட்டனர் என்று நான் அவரைக் கேட்க விரும்புகிறேன்.
வாக்குப் பெட்டிகளைத் திறக்கும் அன்றைய தினம் மேற்கு வங்கம் மம்தாவை அரசியல் அகதியாக்கியிருக்கும். சிஏஏவுக்கு எதிராக போராட்டம் செய்ததை நினைத்தும் அதற்கு கொடுக்கும் விலையை நினைத்தும் மம்தா வருந்துவார்.
விவசாயிகளுக்கு பணம் அனுப்ப விரும்புகிறோம் ஆனால் பயன்பெறுவோர் பட்டியலை மம்தா இன்னமும் அனுப்பவில்லை. அரசியலுக்கும் எல்லை உண்டு. நாடு முழுதும், அரவிந்த் கேஜ்ரிவால் உட்பட அனைவரும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர், ஆனால் மம்தாஜி இன்னமும் அதை எதிர்க்கிறார்.
பிரதமர் கிசான் சம்மான் நிதியின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.6000 அனுப்ப தயாராக இருக்கிறோம். பட்டியலை அனுப்பினால் 2 நாட்களில் தொகை வந்து சேரும். அரசியல் ரீதியாக உங்களிடம் போராடத் தயாராக இருக்கிறோம். ஆனால் விவசாயிகளை வைத்தா அரசியல் செய்வது?
ரூ.11,000 கோடியை நேரடிப் பரிமாற்றம் மூலம் நாங்கள் வங்க மக்களுக்கு அனுப்பியுள்ளோம். ஆனால் மம்தா அரசியல் நையாண்டியைத்தான் வழங்குகிறார். ஆம் மத்திய அரசு நேரடியாக தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளலாமே என்று கிண்டல் செய்தார், ஆனால் இவரது கிண்டலை விரைவில் நிஜமாக்குவார்கள் மக்கள். பாஜக அடுத்து ஆட்சியை அமைக்கும்.
ஷ்ராமிக் ரயில்களில் மேற்கு வங்கத்தில் தங்கள் குடும்பத்தினரைப் பார்க்க ஆவலுடன் வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் வந்த அந்த ரயிலை கரோனா எக்ஸ்பிரஸ் என்று இழிவு செய்தீர்கள். இந்த எக்ஸ்பிரஸ் உங்களை மாநிலத்திலிருந்து அகற்றி விடும். அது உங்களை ஆட்சியிலிருந்து வெளியேற்றும்.
அரசியல் வன்முறையே அரசியல் வழிமுறையாகி விடுமா? எங்கள் ஹெலிகாப்டர்களை நிறுத்தலாம், எங்கள் பேரணிகளைத் தடுக்கலாம் ஆனால் மெய்நிகர் பேரணிகளை நீங்கள் தடுக்க முடியுமா? மாற்றத்தை உங்களால் தடுக்க முடியுமா? நாங்கள் வன்முறைகளைக் கண்டு அஞ்சுபவர்களல்ல, நீங்கள் வன்முறையை வளர்க்க வளர்க்க நாங்களும் வளர்வோம்.
மேற்கு வங்கத்தில் 303 தொகுதிகள் உள்ளன, ஆனால் கடந்த லோக்சபா தேர்தலில் வென்ற 18 இடங்கள் அபாரமான வெற்றியாகும். பாஜக ஒரு ஜனநாயகக் கட்சி, கட்சியின் கொள்கைகளை ஜனநாயக வழியில் பரப்புவோம். ஆட்சியைப் பிடித்த பிறகும் புகார் தெரிவிப்பவர்கள் நாங்கள் அல்லர். திரிணமூலின் மோசமான ஆட்சி, ஊழலைப் பார்த்து மக்கள் கம்யூனிஸ்ட்களை புகழ்ந்து வருகின்றனர்” இவ்வாறு பேசினார் அமித் ஷா.