Last Updated : 09 Jun, 2020 11:07 AM

 

Published : 09 Jun 2020 11:07 AM
Last Updated : 09 Jun 2020 11:07 AM

லடாக்கில் இந்திய எல்லையை சீனா ஆக்கிரமித்திருக்கிறதா? ராஜ்நாத்  சிங்குக்கு ராகுல் காந்தி கேள்வி

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம்

புதுடெல்லி

லடாக்கில் உள்ள இந்திய எல்லைப்பகுதியை சீன ராணுவத்தினர் ஆக்கிரமித்திருக்கிறார்களா என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

பிஹார் மக்கள், பாஜக தொண்டர்களுடன் காணொலி காட்சி மூலம் நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பேசியபோது “அமெரிக்கா, இஸ்ரேலுக்கு அடுத்து தமது எல்லையை பத்திரமாக பாதுகாக்க தெரிந்த நாடு என உலக அளவில் இந்தியாவுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்தார்

இதற்கு கிண்டலடித்து ராகுல் காந்தி பதிவிட்ட ட்விட்டில் “எல்லையில் நிலவும் உண்மையான நிலவரம் என்னவென்பதை அனைவரும் அறிவார்கள். ஆனால் அனைவரின் இதயத்தையும் மகிழ்ச்சிப் படுத்த இந்த சிந்தனை நல்ல யோசனையாக இருக்கும்" என்று தெரிவித்தார்

ராகுல் காந்திக்கும், காங்கிரஸுக்கும் பதிலடி தரும் வகையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அதில் “ கை வலிக்கும்போது அந்த வலிக்கு நீங்கள் மருந்து பயன்படுத்துகிறீர்கள், ஆனால் கையே வலிக்கு காரணமாக இருக்கும்போது என்ன செய்வது” என்று காங்கிரஸின் கை சின்னத்தை குறிப்பிட்டு பேசியிருந்தார்

இந்நிலையில் ராஜ்நாத் சிங்கின் கிண்டலுக்கு பதில் அளிக்கும் வகையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் இன்று பதிவிட்ட கருத்தில் “ கை சின்னத்தைப் பற்றி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்து முடித்துவிட்டார். இனிமேல் அவரால் பதில் அளிக்க முடியுமா. லடாக்கில் இந்திய எல்லையை சீன ராணுவம் ஆக்கிரமித்திருக்கிறதா” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்

இந்திய எல்லைப்பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதா என்ற சந்தேகத்தை ராகுல் காந்தி எழுப்பி வருகிறார். ஆனால் இதுவரை மத்திய அரசு பதில் அளிக்கவில்லை. கடந்த 3-ம் தேதி முதல்முறையாக ராகுல் காந்தி இந்த சந்தேகத்தை எழுப்பினார். அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் " இந்திய எல்லைப்பகுதிக்குள் எந்த சீன ராணுவ வீரர்களும் வரவில்லையா என்று மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x