

ராணுவத்தின் 15-வது படைப்பிரிவு ஜம்மு காஷ்மீரில் செயல்பட்டு வருகிறது. இதற்கு தலைமைவகிக்கும் லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ்.ராஜு நேற்று அவந்திபோராவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரசியல் சட்டத்தின் 370-வதுபிரிவு நீக்கத்தை காஷ்மீர் மக்கள்வரவேற்பதாக கருதுகிறேன். கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது இங்கு அமைதி மேம்பட்டுள்ளது. நீண்டகாலமாக இந்த நிலை உள்ளது. ஜனவரி – பிப்ரவரியில் இங்கு மக்கள் நடமாட்டம் அதிகரித்தது. பள்ளிகள் திறக்கப்பட்டன. குல்மார்க்கில் குளிர்கால சுற்றுலா தொடங்கியது. கரோனா வைரஸ் தொடர்பான ஊரடங்குக்கு முன்பு காஷ்மீரில் கிட்டத்தட்ட இயல்புநிலை வந்துவிட்டது. ஆனால் தற்போது மக்களை நோயிலிருந்து காப்பாற்ற மற்றொரு சுற்று ஊரடங்கு அமலில் உள்ளது.
காஷ்மீரில் நிலவும் அமைதியால் பாகிஸ்தான் கவலை அடைந்துள்ளது. ஏனென்றால் காஷ்மீர் கொந்தளிப்புடனே இருக்க வேண்டும் என்பதே அதன் விருப்பம். காஷ்மீருக்குள் ஆயுதங்கள் மற்றும் தீவிரவாதிகளை அனுப்புவது, காஷ்மீர் மக்களிடம் பொய் பிரச்சாரம் மூலம் இந்திய அரசுக்கு எதிரான மனநிலையை உருவாக்குவது என இருமுனை தாக்குதலில் பாகிஸ்தான் ஈடுபடுகிறது. அந்நாட்டின் பொய்யான தகவல்களை காஷ்மீர் மக்கள் நம்பக் கூடாது. இவ்வாறு பி.எஸ்.ராஜு கூறினார்.