Published : 09 Jun 2020 07:09 AM
Last Updated : 09 Jun 2020 07:09 AM

இணையவழியில் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்துவது சரியல்ல: கஸ்தூரி ரங்கன்

பெங்களூரு:

பள்ளி மாணவர்களுக்கு இணையவழி வகுப்பு நடத்துவது சரியல்ல என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ முன்னாள் தலைவரும் புதிய கல்விக் கொள்கை (2019) வரைவுக் குழுவின் தலைவருமான கே.கஸ்தூரி ரங்கன் கூறியதாவது:

மனிதனின் 86 சதவீத மூளை வளர்ச்சி 8 வயதுக்குள் நடக்கிறது. இந்த காலகட்டத்தில் தொடர்ச்சியான கலந்துரையாடல் உள்ளிட்ட நேரடி தொடர்பின் மூலம் குழந்தைகளின் மூளையை முறைப்படி தூண்டாவிட்டால் அதன் செயல்திறன் குறைய வாய்ப்பு உள்ளது. எனவே, உயர்கல்வி பயிலும் மாணவர்களைப் போல, பள்ளி மாணவர்களுக்கும் இணையவழி வகுப்புகள் நடத்துவது சரியல்ல. எவ்வித அறிவியல் அடிப்படையும் இல்லாமல் இதுபோன்ற அணுகுமுறையை கையாளக் கூடாது. இந்த விவகாரத்தில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.

குறிப்பாக, உடல் மற்றும் மன ரீதியாக பள்ளி மாணவர்களுடன் நேரடியாக தொடர்புகொள்ள வேண்டியது அவசியம். இணையதள வகுப்புகள் மூலம் மாணவர்களிடம் உள்ள விளையாட்டு தன்மை, படைப்பாற்றல் உள்ளிட்ட திறமைகளை வெளிக்கொண்டுவர முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுபோல பிரபல விஞ்ஞானியும் பாரத ரத்னா விருது பெற்றவருமான பேராசிரியர் சிஎன்ஆர் ராவ் கூறும்போது, “மழலையர், முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு குழந்தைகளுக்கு இணையவழி வகுப்புகள் நடத்துவது சரியல்ல. நேரில் பாடம் கற்பிப்பதன் மூலம்தான் குழந்தைகளை கவர முடியும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x