

பெண்கள் மீதான வன்முறை தொடர்பான மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கருத்துக்கு குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.
இந்திய அளவில் கரோனா அச்சுறுத்தல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. உலக அளவில் கரோனா தொற்று எண்ணிக்கையில் இந்தியா, ஸ்பெயின் நாட்டு எண்ணிக்கையைக் கடந்திருக்கிறது.
கரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கை அமல்படுத்தியது மத்திய அரசு. இந்த ஊரடங்கினால் பல்வேறு சிக்கல்களை மக்கள் எதிர்கொண்டனர். குறிப்பாக வீட்டுக்குள் பெண்கள் மீதான வன்முறை அதிகரித்தது. இதற்காக உதவும் பொருட்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியது.
இதனிடையே, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பத்திரிகையாளர் சந்திப்பில், கரோனா ஊரடங்கில் பெண்கள் மீதான வன்முறை அதிகரித்திருப்பதை மறுத்துள்ளார். அனைத்து மாநிலங்களிலும் காவல்துறை ஒழுங்காகச் செயல்பட்டு வருகிறது என்றும், இந்தப் பிரச்சினைகளைக் கையாளும் மையங்களும் ஊரடங்கு சமயத்தில் பணியாற்றி வருகின்றன என்றும் குறிப்பிட்டார்.
இந்தச் செய்தியை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு பதிவிட்டு இருப்பதாவது:
"அந்த அதிர்ஷ்டசாலிகளில் நீங்களும் ஒருவர் என்பதில் மகிழ்ச்சி. நம் நாட்டின் மூலைகளில் இருக்கும் கிராமங்களுக்குச் செல்லுங்கள். குடிசைப் பகுதிகளுக்குச் செல்லுங்கள். இந்த வன்கொடுமை பற்றி அதிகம் வெளியில் பேசாத பெண்களிடம் இதுபற்றிப் பேசுங்கள். இந்தியாவில் மூன்றில் ஒரு பெண் வீட்டில் பாலியல் ரீதியான, உடல் ரீதியான வன்முறைக்கு ஆளாகிறார் என்பது இந்தியாவில் இருக்கும் புள்ளிவிவரம்".
இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.