

மாலத்தீவில் இருந்து கேரளா வந்தவர் கரோனாவால் மரணமடைந்துள்ளதாக, அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா இன்று (திங்கட்கிழமை) திருவனந்தபுரத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
''கேரளாவில் இன்று 91 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 27 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், 14 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 13 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், 8 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், தலா 5 பேர் ஆலப்புழா மற்றும் கொல்லம் ஆகிய மாவட்டங்களையும், 4 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், தலா 3 பேர் திருவனந்தபுரம், பத்தினம் திட்டா, கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களையும், 2 பேர் வயநாடு மாவட்டத்தையும், ஒருவர் பாலக்காடு மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 73 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 15 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவியுள்ளது. இதே மாவட்டத்தைச் சேர்ந்த 2 சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் நோய் பரவியுள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 41 வயதான டினி சாக்கோ என்பவர் இன்று மரணமடைந்தார். கடந்த மே 16-ம் தேதி மாலத்தீவில் இருந்து ஊருக்கு வந்த இவருக்கு சிறுநீரக நோயும், மூச்சுத் திணறலும் இருந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று மதியம் ஒரு மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இவர் மரணமடைந்தார். இதையடுத்து கேரளாவில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
இன்று கேரளாவில் 11 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேரும், பாலக்காடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா 2 பேரும் குணமடைந்துள்ளனர். இதையடுத்து இதுவரை கேரளாவில் கரோனாவிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 814 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,174 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரளாவுக்கு இதுவரை வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து 1,93,363 பேர் வந்துள்ளனர். இவர்களில் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் 49,065 பேரும் கப்பல்கள் மூலம் 1,621 பேரும் வந்தனர். வெளி மாநிலங்களில் இருந்து சாலை வழியாக 1,23,029 பேரும், ரயில்கள் மூலம் 19,648 பேரும் வந்தனர்.
கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் 1,97,078 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 1,95,307 பேர் வீடுகளிலும், 1,771 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். இன்று கரோனா அறிகுறிகளுடன் 211 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 3,827 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதுவரை 85,676 பேரின் உமிழ்நீர் மாதிரிப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் 82,362 பேருக்கு நோய் இல்லை எனத் தெரியவந்துள்ளது. மேலும் சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 22,357 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 21,110 பேருக்கு நோய் இல்லை எனத் தெரியவந்துள்ளது. 5,923 மறு பரிசோதனை உள்பட இதுவரை மொத்தம் 1,13,956 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இன்று கேரளாவில் நோய்த் தீவிரம் உள்ள 6 பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து தற்போது கேரளாவில் நோய்த் தீவிரமுள்ள பகுதிகளின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது''.
இவ்வாறு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.