

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் கர்ப்பிணி யானை இறந்த வழக்கில் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் வெடிமருந்து வைக்கப்பட்ட அன்னாசிப் பழத்தை தற்செயலாக யானை சாப்பிட்டிருக்கலாம் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாலக்காடு மாவட்டம், மண்ணார்காடு வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் சுற்றித்திரிந்த கர்ப்பிணிப் பெண் யானை வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட அன்னாசிப் பழத்தை தின்று தாடை உடைந்து கடந்த மாதம் 27-ம் தேதி உயிரிழந்தது. அந்த யானை ஒரு மாதம் கர்ப்பமாக இருந்ததும் உடற்கூறு ஆய்வில் தெரியவந்தது.
அன்னாசிப் பழத்தில் வெடிவைத்து யானையைக் கொன்ற சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு நடத்திய விசாரணையில் தனியார் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யானை இறந்தது தொடர்பாக கேரள அரசு முழுமையாக அறிக்கை அளிக்க வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கேட்டிருந்தது.
இந்நிலையில் யானை இறந்தது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் இணையமைச்சர் பாபுல் சுப்ரியா ட்விட்டரில் பதிவுகள் வெளியிட்டிருந்தார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
''கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் யானை இறந்தது தொடர்பாக நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் வெடிமருந்து வைக்கப்பட்ட அன்னாசிப் பழத்தை கர்ப்பிணி யானை தற்செயலாக சாப்பிட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
விரிவான விசாரணை அறிக்கையை கேரள அரசிடம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கேட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து கேரள அரசிடம் கேட்டுவருகிறோம். ஏற்கெனவே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதில் தொடர்புடையவர்கள் மற்றர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொண்டுள்ளோம். இந்த விவகாரத்தில் வனவிலங்கு குற்றத் தடுப்புப் பிரிவு விரைந்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளோம்.
ஆதலால், கேரள யானை இறந்தது தொடர்பாக சமூக ஊடகங்களில் வரும் தேவயற்ற, ஆதாரமில்லாத தகவல்களையும், வதந்திகளையும் யாரும் நம்ப வேண்டாம். அந்தப் போலியான செய்திகளையும் யாரும் சமூக ஊடகங்கள் வாயிலாக யாருக்கும் பரப்ப வேண்டாம்.
இந்த யானை இறந்தது தொடர்பாக விரைவாக விசாரணை நடத்தி முடிக்கப்படும். குற்றவாளிகள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுத்து நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத் தரப்படும்.
கர்ப்பிணி யானை மிகவும் கொடூரமான முறையில் இறந்தது கண்டு சுற்றுச்சூழல் அமைச்சகம் வேதனையும் வருத்தமும் அடைந்தது. பாலக்காட்டு வனப்பகுதியில் உள்ள மக்கள் பலமுறை இதுபோன்று காட்டுப்பன்றிகள் தங்கள் விளைநிலத்துக்குள் வராமல் தடுக்க பழத்தில் வெடிமருந்து நிரப்பிக் கொலை செய்யும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது''.
இவ்வாறு பாபுல் சுப்ரியா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே யானை இறந்தது தொடர்பான வழக்கு குறித்து மத்திய வனத்துறையின் வனத்துறை இயக்குநர் மற்றும் சிறப்புச் செயலாளர் சஞ்சய் குமார் தலைமையில் நேற்று முக்கிய ஆலோசனை நடந்தது. இதில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (என்டிசிஏ), வனவிலங்கு காப்பக ஐஜி, சற்றுச்சூழல் அமைச்சகத்தின் கூடுதல் இயக்குநர், வனக்குற்றத் தடுப்பு கூடுதல் இயக்குநர், யானை முகாமின் வல்லுநர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்