

மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியை தொடர்ந்து பல மாநிலங்களில் இன்று காலை கோயில்கள் உட்பட வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. கடும் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புப்படி, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மதக்கூட்டங்கள், சமூகக் கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதி வரையும் பின்னர் மே 17-ம் தேதி வரையிலும் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 4-ம் கட்டமாக மே 31-ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டது.
பின்னர் ஜூன மாதத்திலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும் அந்தந்தப் பகுதிகளுக்கு ஏற்ப தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 8-ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதித்தது. இதனால் பல மாநிலங்களிலும் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கர்நாடகா, ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான் என பல மாநிலங்களிலும் வழிபாட்டுத் தலங்கள் இன்று திறக்கப்பட்டன. கோயில்கள் இன்று காலையில் திறக்கப்பட்டன. எனினும் கடும் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.