Published : 08 Jun 2020 08:54 AM
Last Updated : 08 Jun 2020 08:54 AM

புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உள்ளூரிலேயே வேலை: தொழில் துறையினருக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதையடுத்து, உள்ளூரிலேயே உள்ள தொழிலாளர்களைப் பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு தொழில் துறையினரை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

கோவிட் 19 பொது முடக்கம் உலக அளவில் உழைக்கும் மக்களிடையே நிச்சயமற்ற தன்மையையும், வேலை இழப்பையும் உருவாக்கியுள்ளது. இந்தியாவில் கோவிட்-19 பொதுமுடக்கம் காரணமாக தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள தினக்கூலித் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பொதுமுடக்கம் காரணமாகப் பணியிழந்த அந்தத் தொழிலாளர்கள், உணவுக்கு அரசு தரும் இலவச ரேஷன் பொருள்களை நம்பியிருந்தார்கள். வேறு மாநிலங்களில் சிக்கித்தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கும், தங்கள் கிராமங்களுக்கும் திரும்பிச் செல்வதற்கு ஏற்பாடு செய்து தருமாறு அரசுகளை கேட்டுக் கொண்டார்கள்.

தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்த புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்கள் உள்ள ஜார்கண்ட், உத்திரப்பிரதேசம், பிஹார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு அனுப்புவதற்காக ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை மத்திய அரசு இயக்கியது. வெள்ளிக்கிழமை வரை இந்திய ரயில்வே 4155 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மூலம், 57 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களை, அவர்களது சொந்த ஊருக்கு ஏற்றிச்சென்றுள்ளது.

இதேபோல் சிறப்பு ரயில்கள் மூலமாக மகாராஷ்டிராவில் இருந்த புலம்பெயர் தொழிலாளர்கள், தமிழ்நாட்டுக்கும், கேரளாவுக்கும் திருப்பி அழைத்துவரப்பட்டனர்.

புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதையடுத்து, உள்ளூரிலேயே உள்ள தொழிலாளர்களைப் பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு தொழில் துறையினரை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மத்திய தொழிலாளர் நலத்துறை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x