வேலை பறிபோனதால் வாழைப்பழம் விற்கும் ஆசிரியர்

வேலை பறிபோனதால் வாழைப்பழம் விற்கும் ஆசிரியர்
Updated on
1 min read

ஆந்திர மாநிலத்தில் வேலை பறிபோனதால் ஆசிரியர் ஒருவர், வாழ்க்கையை நடத்துவதற்காக தள்ளுவண்டியில் வாழைப்பழம் விற்று வருகிறார்.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் தனியார் பள்ளி ஒன்றில் தெலுங்கு மற்றும் சம்ஸ்கிருத ஆசிரியராக பணியாற்றியவர் பி.வெங்கட சுப்பையா (43). இவர் நெல்லூரின் வேடாயபாலம் உள்ளிட்ட பகுதிகளில் தள்ளுவண்டியில் வாழைப்பழம் விற்று வருகிறார். கரோனா வைரஸ் தொடர்பான ஊரடங்கு அமலுக்கு வந்த பிறகு ஏப்ரல் வரை பாதி சம்பளமே பள்ளி நிர்வாகம் கொடுத்துள்ளது.

இந்நிலையில், அடுத்த கல்வி ஆண்டுக்கு 6 -7 மாணவர்களை புதிதாக சேர்த்து விட்டால்தான் மே மாத சம்பளம் தர முடியும் என்றும் பணியில் தொடர்ந்து நீடிக்க முடியும் என்றும் பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.

இதுகுறித்து வெங்கட சுப்பையா கூறியதாவது:

கடந்த ஆண்டு வழக்கமான எனது ஆசிரியர் பணிகளுடன் புதியமாணவர்களை என்னால் சேர்க்க முடிந்தது. ஆனால் இந்த ஆண்டு கரோனா வைரஸ் அச்சம் காரணமாக என்னை யாரும் தங்கள் வீட்டில் அனுமதிக்க மறுக்கின்றனர். இதனால் என்னை மே மாதம் முதல்பணியில் இருந்து நின்றுவிடுமாறு பள்ளி நிர்வாகம் கூறிவிட்டது. வேறு வழியின்றி மே 20 முதல் வாழைப்பழம் விற்று வருகிறேன்.

பள்ளி ஆசிரியராக மாதம் 16,080சம்பளம் வாங்கி வந்தேன். தற்போது வாழைப்பழ விற்பனை மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.200 கூட சம்பாதிக்க முடியவில்லை. வாழ்க்கை கசந்து வருகிறது. இவ்வாறு ஆசிரியர் வெங்கட சுப்பையா கூறினார்.

சுப்பையாவுக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். ஆசிரியர் பணியில் 15 ஆண்டுகள் அனுபவம் கொண்ட அவர், 2 பட்ட மேற்படிப்புகளை முடித்துள்ளார்.

இதுகுறித்து நெல்லூர் மாவட்ட கல்வி அதிகாரி எம்.ஜனார்த்தன ஆச்சார்யலு கூறும்போது, “இந்த விவகாரம் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தவுள்ளோம். ஊரடங்கு காலத்தில் ஆசிரியர்களுக்கு சம்பளம் தரவேண்டும் என தனியார் பள்ளி நிர்வாகங்களை வலியுறுத்தி உள்ளோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in