

வழிபாட்டுத் தலங்கள், ஷாப்பிங் மால்கள், ரெஸ்டாரண்ட்கள் நாளை திறக்கப்பட்டால் மக்கள் வழக்கம்போல் செல்வார்களா என்பது குறித்து நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 50சதவீதத்துக்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸ்அ அச்சம் காரணமாக செல்லமாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர்
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 4 கட்ட லாக்டவுனை மத்திய அரசு கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை கடைப்பிடித்தது. இந்த லாக்டவுன் காலகட்டத்தில் அனைத்து ஷாப்பிங் மால்கள், உணவகங்கள், ரெஸ்டாரண்ட்கள், வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டிருந்தன. உணவங்களில் பார்சல் மட்டுமே வழங்க தற்போது அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இந்த லாக்டவுன் முடிந்து அதை நீக்கும் முதல் கட்டம் நடைமுறையில் இருக்கிறது. அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை ஏற்கெனவே மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்தது.
இந்த சூழலில் வரும் 8-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஷாப்பிங் மால்கள், ரெஸ்டாரண்ட், வழிபாட்டுத்தலங்களகளைத் திறக்கவும், உணவங்களில் 50 சதவீதம் இருக்கையில் அமர்ந்து உண்ணவும் மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.
இதற்கான வழிகாட்டி நெறிமுறைகளையும் மத்திய சுகதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது
இந்த சூழலில் "லோக்கல்சர்க்கிள்ஸ்" எனும் நிறுவனம் 8-ம் தேதிக்கு பின் வழிபாட்டுத் தலங்கள், உணவங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்கப்பட்டால் வழக்கம் போல் மக்கள் செல்வார்களா என்று கேள்வி கேட்டு கருத்துக்கணிப்பு நடத்தியது.
இந்த கருத்துக்கணிப்பில் 4 கேள்விகள் மட்டும் கேட்கப்பட்டன, 32 ஆயிரம் பேர் பங்கேற்று பதில் அளித்துள்ளனர்.
இதில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டால் அங்கு செல்வீர்களா என்ற கேள்விக்கு 8,861 பேர் பதில் அளித்துள்ளனர். இதில் 57 சதவீதம் பேர் அடுத்த 30 நாட்களுக்கு கோயில்களுக்குச் செல்லமாட்டோம், சமூகவிலகல் இல்லாத இடங்களுக்கும் செல்வதைத் தவிர்ப்போம் எனத் தெரிவித்துள்ளனர்.
32 சதவீதம் பேர் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வோம் என்றும், 11 சதவீதம் பேர் இன்னும் முடிவு ஏதும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்
வரும் 8-ம் தேதிக்குப்பின் உணவகங்கள், ரெஸ்டாரண்ட்கள் திறக்கப்படும் போது அங்கு பிடித்தமானவற்றை சாப்பிடச் செல்வீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு 8,616 பேர் பதில் அளித்தனர். அடுத்த30 நாட்களுக்கு எந்த விதமான உணவகங்களுக்கும் சாப்பிடச் செல்லமாட்டோம் என்று 81 சதவீதம் பேர் பதில் அளித்தனர்.
தங்களுக்கு பிடித்தமானவற்றை சாப்பிட உணவங்களுக்குச் செல்வீர்களா என்ற கேள்விக்கு 8,459 பேர் பதில் அளித்தனர். அதில் 74 சதவீதம் பேர் கரோனா அச்சத்தால், தங்களுக்கு பிடித்தமான உணவுகளைச் சாப்பிடக்கூட ரெஸ்டாரண்ட் செல்லமாட்டோம் எனத் தெரிவித்தனர்
ஷாப்பிங் மால்களுக்கு செல்வீர்களா என்ற கேள்விக்கு 8,354 பேர் பதில் அளித்தனர். இதில் 70 சதவீதம் பேர் ஷாப்பிங் மால்களுக்குஅடுத்த ஒருமாதம் செல்லமாட்டோம்என்றும், 21 சதவீதம் ேபர் ஷாப்பிங் செல்ல முயற்சிப்போம் என்றும், 9 சதவீதம் பேர் இன்னும் முடிவு செய்யவில்லை எனவும் தெரிவித்தனர்
இதுகுறித்து லோக்கல்சர்க்கிள் நிறுவனத்தின் மேலாளர் அக்சய் குப்தா கூறுகையில் “ கரோனா வைரஸ் தொற்றிவிடும் அச்சத்தால் இன்னும் சிறிது காலத்துக்கு ஷாப்பிங் மால்கள் பக்கம் செல்லமாட்டார்கள் பொருட்கள்ஏதும் தேவையென்றால் ஆன்-லைன் மூலம் வாங்கவே இனிவரும் நாட்களில் மக்கள் விரும்புவார்கள்” எனத் தெரிவித்தார்