

டெல்லியில் நேற்று காணொலிக்காட்சி மூலம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறியதாவது:
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் போதுமான படுக்கைகளும் சிகிச்சை அளிக்க போதிய வென்டிலேட்டர்களும் உள்ளன.இங்கு சில தனியார் மருத்துவமனைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அவ்வாறு மறுக்கும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும்.
கரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களை சிகிச்சைக்காக அனுமதித்து உடனடியாக அவர்களுக்கு சிகிச்சைகளை தொடங்க வேண்டும். கரோனா வைரஸ் இல்லை என்பது தெரிந்தால் கரோனா அல்லாத வார்டுக்கு அவர்களை மாற்ற வேண்டும்.
இவ்வாறு கேஜ்ரிவால் கூறினார்.
5 அரசு மருத்துவமனைகளில் அடுத்த 3 வாரங்களில் கரோனா சிகிச்சைக்கான படுக்கைகளின் எண்ணிக்கை 13,870 ஆக உயர்த்தப்படும் என்றும் இவற்றில் 750 படுக்கைகள் வென்டிலேட்டர் வசதியுடன் இருக்கும் என்றும் டெல்லி அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.