மக்களைப் போராடத் தூண்டியதாக‌ மனித உரிமை செயற்பாட்டாளர் ஆகார் படேல் மீது வழக்கு: பெங்களூரு போலீஸாரின் நடவடிக்கைக்கு வலுக்கும் எதிர்ப்பு

ஆகார் படேல்.
ஆகார் படேல்.
Updated on
1 min read

மக்களைப் போராட தூண்டும் விதமாக, ட்விட்டர் சமூக வலைதளத்தில் கருத்துகளைப் பதிவிட்டதாக மனித உரிமை செயற்பாட்டாளர் ஆகார் படேல் மீது பெங்களூரு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு எழுத்தாளர்களும், மனித உரிமை அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பெங்களூருவைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளரும், பத்திரிகையாளருமான‌ ஆகார் படேல் ஆங்கில இதழ்களில் தொடர்ந்து அரசியல் விமர்சன கட்டுரைகள் எழுதி வருகிறார்.

கடந்த 20 ஆண்டுகளாக மனித உரிமை களத்தில் செயல்பட்டுவரும் அவர் கருத்துரிமை சார்ந்த போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் இந்திய கிளைக்கு தலைவராகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மே 31-ம் தேதி அமெரிக்காவில் நடைபெற்றுவரும் கறுப்பின மக்களின் உரிமைப் போராட்டத்தை ஆதரித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

அதில், ''அமெரிக்காவில் கறுப்பின மக்கள் தங்களின் உரிமைக்காகப் போராடுவதைப் போல இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ள தலித்துகள், சிறுபான்மையினர், பெண்கள், பழங்குடியினர் உள்ளிட்டோர் போராட வேண்டும். போராட்டமே உரிமையைப் பெற்றுதரும்''எனப் பதிவிட்டு இருந்தார். இதனை பலர் ஆதரித்த நிலையில், பாஜக ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்தினர்.

இந்நிலையில், பெங்களூருவில் உள்ள ஜே.சி.நகர் காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜ் அளித்த புகாரின் பேரில் ஆகார் படேல் மீது மக்களைப் போராட தூண்டியதாகவும், பொது அமைதியை சீர்குலைக்க முயன்றதாகவும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு ஆகார் படேல், '' நான் சட்டப்படி எந்தத் தவறும் செய்யவில்லை. போலீஸார் என் மீது சட்டவிரோதமான முறையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை சட்டப்படி எதிர்க்கொள்வேன்''என்றார்.

பெங்களூரு போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெங்களூரு போலீஸார் பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனிடையே ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகளும் ஆகார் படேல் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என முதல்வர் எடியூரப்பாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in