

கேரளாவில் அன்னாசிப்பழத்தில் வெடிமருந்து வைத்து யானை கொல்லப்பட்டது தொடர்பாக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மேனகா காந்தி, மலப்புரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் அவர் மீது கேரள போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
பாலக்காடு மாவட்டம், மண்ணார்காடு வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் சுற்றித்திரிந்த கர்ப்பிணிப் பெண் யானை வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட அன்னாசிப்பழத்தை தின்று தாடை உடைந்து உயிரிழந்தது..அந்த யானை ஒரு மாதம் கர்ப்பமாக இருந்ததும் உடற்கூறு ஆய்வில் தெரியவந்தது.
அன்னாசிப்பழத்தில் வெடிவைத்து யானையைக் கொன்ற சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு நடத்திய விசாரணையில் தனியார் தேயிலை தோட்டத் தொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யானை கொலைக்கு பிரபலங்கள் பலரும், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேஹர், மேனகா காந்தியும் கண்டனம் தெரிவித்திருந்தனர்
இதில் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் “ மலப்புரம் மாவட்டம் என்றாலே கடுமையான குற்றங்களுக்கும் குறிப்பாக விலங்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கும் மாவட்டமாக அறியப்படுகிறது. விலங்குகளை வேட்டையாடிய அந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வேட்டைக்காரர் மீதுகூட இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை, இதனால் தொடர்ந்து அவர்கள் வேட்டையாடி வருகிறார்கள்” எனத் தெரிவித்திருந்தார்
ஆனால், யானைக் கொல்லப்பட்டது மலப்புரம் மாவட்டம் அல்ல, பாலக்காடு மாவட்டமாகும். பாலக்காடு மாவட்ட மண்ணார்காடு வனச்சரகத்துக்கு உட்பட்டதாகும். ஆனால் மலப்புரத்தை குறிப்பிட்டு மேனகா காந்தி ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இதை முதல்வர் பினராயி விஜயன் கூட கண்டித்து, குறிப்பிட்ட மாவட்டத்தின் மீது அவதூறு பரப்புகிறார்கள் எனத் தெரிவித்திருந்தார்
இந்நிலையில் மேனகா காந்தி நடத்திவரும் பிஎப்ஏ எனும் விலங்குகள் நல அமைப்பின் இணையதளத்ைத ஹேக்கர்கள் முடக்கி மேனகா காந்தி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்
இந்த சூழலில் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜலீல் என்பவர் மேனகா காந்தி மீது போலீஸில் புகார் அளித்தார் . ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளைக் கூறி மாவட்ட மக்களை அவமானப்படுத்துகிறார், கலவரத்தையும், அமைதியயற்ற சூழலையும் ஏற்படுத்த முயல்கிறார் என புகாரில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து மலப்புரம் போலீஸால் மேனகா காந்தி ஐபிசி 153-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், 6-க்கும் மேற்பட்ட புகார்கள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மலப்புரம் மாவட்ட எஸ்பி. அப்துல் கரீம் கூறுைகயில் “ மேனகா காந்தி மீது கொடுத்த புகாரில் விசாரணை நடந்து வருகிறது. இதுவரை 6 புகார்கள் தரப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்