

கரோனாவால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனில் சிக்கி எந்த புலம்பெயர் தொழிலாளியும் உணவு, குடிநீர், மருந்துகள் இன்றி உயிரிழக்கவில்லை, அவர்களுக்கு ஏற்கெனவே இருந்த உடல்பாதிப்புகளால் உயிரிழந்தார்கள் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது
கரோனா வைராஸால் கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சிக்கி அவதியுற்றனர்.
இந்தக் காட்சிகளையும், நடந்து செல்லும் நிகழ்வுகளையும், சைக்கிளில் செல்லும் சம்பவங்களையும் நாளேடுகள், தொலைக்காட்சி வாயிலாகப் பார்த்தும், படித்தும் உணர்ந்த உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து கடந்தமாதம் 26-ம் தேதி வழக்காகப் பதிவு செய்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன், சஞ்சய் கிஷன் கவுல், எம்ஆர் ஷா ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் துஷார் மேத்தாவும், தொண்டு நிறுவனங்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், எம்.பி. மகுவா மொய்த்ரா சார்பில் வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், உச்ச நீதிமன்றத்துக்கு வழக்கில் உதவ மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆகியோர் ஆஜராகினர்.
லாக்டவுனால் புலம்பெயர் தொழிலாளர்கள் உணவு,குடிநீர் இல்லாமல் ரயில்களில் உயிரிழந்ததாக வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டினர். இந்த குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு தரப்பில் ஆஜராகிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தார்.
அவர் வாதிடுகையில் “ லாக்டவுன் காலத்தில் எந்த புலம்பெயர் தொழிலாளியும் உணவு, குடிநீர், மருந்துகள் இல்லாமல் உயிரிழக்கவில்லை. அவ்வாறு உயிரிழந்துவர்கள் அனைவருக்கும் ஏற்கெனவே உடல்ரீதியான பிரச்சினைகள் இருந்துள்ளன.
இப்போதுள்ள சூழலில் தனிமைப்படுத்துதற்கான புதிய விதிமுறைகள் எதையும் உச்ச நீதிமன்றம் அறிவிக்க வேண்டாம், இப்போதுள்ள நடைமுறையே தொடரட்டும் அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களும் சொந்த ஊர் செல்லட்டும்” எனக் கேட்டுக்கொண்டார்
அப்போது நீதிபதிகள் “ புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்துக்குச் சென்றவுடன் அந்த மாநிலஅரசு அவர்கள் எந்த மாநிலத்திலிருந்து வந்துள்ளார்கள். சொந்த மாநிலத்தில் எந்த மாதிரியான வேலை தேவை என்பதை அறிந்து ஒருபதிவேட்டை மாவட்டந்தோறும் உருவாக்கலாம்” எனத் தெரிவித்தனர்
அப்போது குறுக்கிட்ட மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் “ புலம்பெயர் தொழிலாளர்கள் பெரும்பாலும் கல்வியறிவு போதுமான அளவு இல்லாதவர்கள். பதிவு செய்வதை பரவலாக்கினால், தொழிலாளர்கள் எளிதாக தங்கள் விவரங்களை பதிவு செய்வார்கள்” எனத் தெரிவித்தார்
மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் “ தொழிலாளர்களிடம் அவர்களி்ன் பெயர், வயது, தொழில், ஆதார் எண், முகவரி தவி்ர்த்து வேறு எந்த தகவலும் கேட்கக்கூடாது” எனத் தெரிவித்தார்
அப்போது வழக்கறிஞர் அபிஷே சிங்வி கூறுகையில் “ புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த முழுமையான விவரங்கள் இல்லாததால் எந்தவிதமான நடவடிக்கை எடுப்பதிலும் குழப்பம் நீடிக்கிறது. ஆதலால், அவர்கள் குறித்த பதிவேடு அவசியம்” எனத் தெரிவித்தார்
இதையடுத்து, நீதிபதிகள் அசோக் பூஷன், சஞ்சய் கிஷன் கவுல், எம்ஆர் ஷா பிறப்பித்த உத்தரவில் “ புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரையும் தங்கள் சொந்த மாநிலத்துக்கு அனுப்பம் நடைமுறையை அடுத்த 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். புலம்பெயர் எத்தனை பேர் வந்துள்ளார்கள், எந்த மாநிலத்தில் இருந்து வந்துள்ளார்கள், என்ன பணி செய்தார்கள் என்பது குறித்த பதிவேட்டை மாநில அரசுகள் கண்டிப்பாக உருவாக்க வேண்டும்.
ஒருவேளை புலம்பெயர் தொழிலாளர்கள் குறிப்பிட்ட காலத்துக்குப்பின் மீண்டும் தாங்கள் வேலை செய்த மாநிலத்துக்கே செல்ல விரும்பினால் அதற்கும் மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு புதிதாக வேலைவாய்ப்பு உருவாக்க தனியாக கவுன்சிலிங் மையம் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் எத்தனை புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்பியுள்ளார்கள் என்பது குறித்த பதிவேட்டையும் தயாரிக்க ேவண்டும்.
அதுமட்டுல்லாமல், அவர்களுக்கு என்ன விதமான வேலைவாய்ப்பு தேவை என்பதையும் கேட்டறிந்து அதை வழங்கிட வேண்டும், தேவையான நிவாரண உதவிகளையும் மாநில அரசுகள் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்
இந்த வழக்கில் வரும் செவ்வாய்கிழமை இறுதி உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது