

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் போலீஸார் சிலர் ஒருவரைப்பிடித்து கீழே தள்ள போலீஸாரில் ஒருவர் அந்த நபரின் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்திய வீடியோ ‘ஜோத்பூரில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட்’ சம்பவம் என்ற பெயரில் சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.
அதாவது அந்த நபர் முகக்கவசம் இல்லாமல் சுற்றித் திரிந்ததாகவும் போலீஸார் அதை கேட்ட போது அந்த நபர் போலீஸாரைத் தாக்கியதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
அமெரிக்காவே பற்றிய எரியக் காரணமாகும் கருப்பர் கழுத்தில் பூட்ஸ் காலால் மிதித்த ஜார்ஜ் பிளாய்ட் சம்பவத்துடன் இது ஒப்பிடப்பட்டு சமூகவலைத்தள வாசிகள் போலீஸாரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஜோத்பூர் நபர் பெயர் முகேஷ் குமார் பிரஜாபத் (38), வியாழனன்று இவரை போலீஸார் சாலையில் மடக்கினர். ஏன் மாஸ்க் அணியவில்லை என்றனர். உடனே அபராதம் கட்டு என்று போலீஸார் நச்சரிக்க பிரஜாபத் அவர்கள் மீது பாய்ந்து போலீஸ் சீருடையைக் கிழித்துள்ளார். இதனையடுத்து போலீஸார் ஆத்திரமடைந்து முகேஷ்குமாரை கீழே தள்ள ஒரு போலீஸ் அவரது கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தும் காட்சி பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடைசியில் போலீஸைத் தாக்கியதற்காக கோர்ட்டில் நிறுத்தப்பட்ட முகேஷ் குமாருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது.
இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று இவரது தந்தையை தாக்கியதற்காக அவர் மீது தந்தையே வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது
இந்த சம்பவத்தைப் பார்க்க பெரிய அளவில் மக்கள் கூட்டம் அப்பகுதியில் திரண்டது.