

குவாஹாட்டி: அசாம் மாநிலம் குவாஹாட்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சில நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். அங்கு இரைப்பைக் குடல் அறுவை சிகிச்சை நிபுணரான வாலியுல் இஸ்லாமை சந்தித்த அவர், செல்போன் சார்ஜர் வயரை தவறுதலாக விழுங்கிவிட்டதாகவும் இதனால் தாங்க முடியாத வயிற்று வலி இருப்பதாகவும்கூறியுள்ளார்.
இதையடுத்து, அந்த இளைஞரின் வயிற்றில் ‘எண்டோஸ்கோப்பி’ செய்து மருத்துவர்கள் பார்த்ததில் எந்தப் பொருளும் இல்லை. இதையடுத்து, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டபோதும், அவரது இரைப்பைக் குடல் பகுதிகளில் வயர் ஏதும் இல்லை. இதனால் குழப்பமடைந்த மருத்துவர்கள், அவரது வயிற்றுப் பகுதி முழுவதும் எக்ஸ்ரே செய்து பார்த்துள்ளனர். அப்போது அவரது சிறுநீர்ப் பையில் சார்ஜர் வயர் இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன் பின்னர், சிறுநீர் பையில் அறுவை சிகிச்சை செய்து அந்த வயரை மருத்துவர்கள் எடுத்தனர்.
இதுகுறித்து மருத்துவர் வாலியுல் இஸ்லாம் கூறும்போது, “எனது 25 வருட அனுபவத்தில் இதுபோன்ற ஒரு சம்பவத்தை நான் பார்த்ததில்லை. அந்த இளைஞர் வாய் வழியாக வயரை விழுங்கியிருக்க வாய்ப்பில்லை. இதுகுறித்த உண்மையை அவர் மறைக்கிறார். உண்மையை கூறியிருந்தால் முதலிலேயே சிறுநீர் பையில் அறுவை சிகிச்சை செய்திருக்கலாம். தற்போது அந்த இளைஞர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டார்” என்றார்.