

வெடிகளால் நிரப்பப்பட்ட அன்னாசிப் பழத்தை தின்றதால் வாயில் காயங்கள் துன்புறுத்த 2 வாரமாக எதையும் சாப்பிட முடியாமல் யானை இறந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலக்காடு மாவட்டம் அமைதிப் பள்ளத்தாக்கு பூங்காவைச் சேர்ந்த யானை உணவு தேடி கிராமத்துக்குள் நுழைந்தது. அப்போது வெடிபொருட்கள் நிரம்பிய அன்னாசிப் பழத்தை அந்த யானை தின்றது, அப்போது வெடி வெடித்து அதன் நாக்கு, வாய் சிதறின. வேதனை தாங்க முடியாமல் தண்ணீருக்குள் போய் நின்றது.
கும்கி யானை உதவியுடன் இந்த யானையை மீட்டனர் ஆனால் யானை இறந்து போனது. இது நாடு முழுதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்த அனைவரும் கண்டனங்களையும் வேதனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் யானையின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது, அதில், வெடிகள் வெடித்ததில் வாயில் ரணங்கள் ஏற்பட எரிச்சல் தாங்காமல் தண்ணீருக்குள் சென்று தண்ணீர் அருந்தியுள்ளது. இதில்தான் காயங்கள் சீழ்பிடித்துள்ளன. இதனால் 2 வாரங்களாக யானையால் எதையும் சாப்பிட முடியாமல் தண்ணீர் குடிக்க முடியாமல் தவித்துள்ளது.
பசி மயக்கம், காயத்தின் வலியால் மயங்கி விழுந்து தண்ணீரில் மூழ்கி யானை இறந்துள்ளது. வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட பழத்தைத் தின்றதால்தான் யானைக்கு காயம் ஏற்பட்டது உறுதியாகத் தெரிகிறது., என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவரை கேரள அரசு கைது செய்துள்ளது, மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.