

கரோனா பிரச்சினையால், பலர் தாங்கள் வளர்த்து வந்த செல்லப் பிராணிகளை விட்டுவிட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் செல்லப் பிராணிகளை விட்டுவிட்டு அவர்கள் தவித்து வந்தனர். இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் தீபிகா சிங் என்பவர் தனது உறவினர்களுக்காக டெல்லியிலிருந்து மும்பை வரை தனி விமானத்துக்கு ஏற்பாடு செய்தார். அதில் சில செல்லப் பிராணிகளும் வர ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் தனி விமானத்தில் பயணம் செய்த சிலர், தங்களுடன் செல்லப் பிராணிகள் வருவதற்கு தயக்கம் தெரிவித்தனர். இதையடுத்து, 6 செல்லப் பிராணிகளுக்காக தனி விமானம் ஒன்றை தீபிகா சிங் ஏற்பாடு செய்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “இதற்காக அக்ரெஷன் ஏவியேஷன் என்னும் தனியார் விமான நிறுவனத்தில் தனி விமானத்துக்கு ஏற்பாடு செய்தேன். ஒரு செல்லப் பிராணிக்கு ரூ.1.6 லட்சம் கட்டணம் வீதம் மொத்தம் 6 செல்லப் பிராணிகளுக்காக ரூ.9.06 லட்சம் செலவிட்டேன். 2 ஷி டிசு வகை நாய்கள் உள்பட 5 நாய்கள், மயில் தோற்றத்திலான கோழி என 6 செல்லப் பிராணிகள் இந்த விமானத்தில் வந்து சேர்ந்தன" என்றார். செல்லப் பிராணிகளுக்காக தனி விமானம் இயக்கப்பட்ட செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.