

கரோனா பரவலைத் தடுக்க அமலான ஊரடங்கினால் மார்ச் 25 முதல் மே 31 வரையிலான சாலை விபத்துக்களில் 750 தொழிலாளர்கள் பலியானதாகத் தெரிந்துள்ளது. இதன் மீதான புள்ளிவிவரங்களை தொகுத்து ’சேவ் லைப் பவுண்டேஷன்’ எனும் தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவலால் அமலான ஊரடங்கில் பல தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்தனர். இதனால், பட்டினி நிலைக்கும் தள்ளப்பட்டவர்கள் உள்ளிட்டப் பலரும் தங்கள் வீடுகளுக்கு திரும்பி விட விரும்பினர்.
இதற்காக, கிடைத்த வகையிலான போக்குவரத்து வாகனங்களிலும், நடைபாதையாகவும், கிளம்பினர். இதில் ஏற்பட்ட சாலை விபத்துக்களால் பலரும் உயிரிழந்தனர். இதுபோன்ற உயிர் பலி எண்ணிக்கைகளை தனியார் தொண்டு நிறுவனமான ‘சேவ் லைப் பவுண்டேஷன்’ தொகுத்து வெளியிட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மே 31 வரை ஏற்பட்ட 1461 விபத்துக்களால் நாடு முழுவதிலும் 750 உயிர்கள் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றில் 198 பேர் கூலித்தொழிலாளர்கள் ஆவர். இதே விபத்துக்களில் 1390 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் அந்த புள்ளிவிவரம் கூறியுள்ளது.
இவற்றில் மிக அதிகமாக உத்திரப்பிரதேச மாநிலத்தில் 245 உயிர்கள் பலியானதாக அந்த புள்ளிவிவரம் குறிப்பிடுகிறது. இது மொத்த உயிர் பலியில் சுமார் 30 சதவிகிதமாகும்.
மேலும் அதன் புள்ளிவிவரங்களின்படி, தெலுங்கானா மற்றும் மத்தியப்பிரதேசம் தலா 56, பிஹார் 43, பஞ்சாப் 38, மகாராஷ்டிரா 36, ஜார்கண்ட் 33 மற்றும் ஹரியாணாவில் 28 உயிர்களும் பலியாகி உள்ளன. ஊரடங்கின் முதல் கட்டமான மார் 25 முதல் ஏப்ரல் 14 வரையிலானதில் 67 உயிர்கள் பலியாகின.
ஏப்ரல் 15 முதல் மே 3 வரையிலான இரண்டாம் கட்டத்தில் 70 உயிர்கள் சாலை விபத்துக்களில் பலியாகின. நான்காவது கட்டமாக மே 4 முதல் 17 ஆம் தேதி வரையில் 291 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடைசியாக நான்காவது கட்டமான மே 4 முதல் 31 வரையில் 322 சாலை விபத்துக்கள் நேர்ந்துள்ளன. இதில், 322 உயிர்கள் பலியானதாகவும் சேவ் லைப் பவுண்டேஷன் புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.
இந்த சாலை விபத்துக்களை தடுக்க, மத்திய அரசு ஏற்பாடு செய்த சிறப்பு ரயில்களில் ஓடத் துவங்கிய பின்பும் புலம் பெயர்ந்த் தொழிலாளர்கள் பலி முடிவிற்கு வரவில்லை. ஓடும் ரயிலில் உடல் நலம்குன்றியும், பட்டினியாலும் பலர் பரிதாபமாக மடிந்தது குறிப்பிடத்தக்கது.