Last Updated : 05 Jun, 2020 05:35 PM

 

Published : 05 Jun 2020 05:35 PM
Last Updated : 05 Jun 2020 05:35 PM

80 நாட்களுக்குப் பின்: வரும் 11-ம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோயில் பக்தர்களுக்காகத் திறக்கப்படுகிறது; பல கட்டுப்பாடுகள் அறிமுகம்

கோப்புப்படம்

திருப்பதி

கரோனோ வைரஸ் பரவல் அச்சம் காரணமாக கடந்த 80 நாட்களாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த திருப்பதி ஏழுமலையான் கோயில் வரும் 11-ம் தேதி முதல் பக்தர்களுக்காக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படுகிறது.

மணிக்கு 500 பக்தர்கள் வீதம், நாள்தோறும் 6 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் நாட்டில் பரவத் தொடங்கியதும் கடந்த மார்ச் 20-ம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்காக அனுமதி மறுக்கப்பட்டது. 4 கட்ட லாக்டவுன் காலத்தில் பக்தர்கள் யாரும் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்ற போதிலும் கோயிலில் மூலவருக்கு வழக்கமான பூஜைகள் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையில் கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட 4 கட்ட லாக்டவுன் முடிந்து தற்போது லாக்டவுனை நீக்கும் முதல்கட்டம் நடந்து வருகிறது. வரும் 8-ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க மத்திய அரசு அனுமதித்து அதற்கன வழிகாட்டி நெறிமுறைகளை நேற்று வெளியிட்டது.

மேலும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களை லாக்டவுன் காலத்துக்குப் பின் எவ்வாறு அனுமதிப்பது, சமூக விலகலை எவ்வாறு கடைப்பிடிப்பது ஆகியவை குறித்து திருப்பதி திருமலை தேவஸ்தானம் தங்களின் அலுவலர்களை வைத்து கடந்த சில நாட்களாக ஒத்திகை பார்த்து வருகிறது.

இந்த சூழலில் 80 நாட்களுக்குப் பின் வரும் 11-ம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோயில் பக்தர்களுக்காக திறக்கப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் தலைவர் ஒய்.வி சுப்பா ரெட்டி, கோயில் நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால், கூடுதல் அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் இன்று நிருபர்களுக்குப்பேட்டி அளித்தனர்.

அவர்கள் கூறியதாவது:

''கரோனா வைரஸ் பரவல் காரணமாக 80 நாட்களாக பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் வரும் 11-ம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோயில் பக்தர்களுக்காக திறக்கப்பட உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். 6 அடி சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும்.

நாள்தோறும் 6 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள். மணிக்கு 500 பக்தர்கள் வீதம் 13 மணிநேரத்துக்கு 6 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைன் மூலம் ரூ.300 மதிப்புள்ள, 3 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே நாள்தோறும் விற்கப்படும். மற்ற 3 ஆயிரம் டிக்கெட்டுகள் நடந்து வரும் பக்தர்களுக்காக வழங்கப்படும். வரும் 8-ம் தேதி முதல் ஆன்லைனில் தரிசனத்துக்கான டிக்கெட் விற்பனை தொடங்கும்.

நாடு முழுவதும், வெளிநாடுகளில் இருந்து யார் வந்திருந்தாலும் கோயிலில் 10 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு அனுமதியில்லை. பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் இருக்கும் அனைத்து திருமலை ஊழியர்களும் பிபிஇ கிட் அணிந்திருப்பார்கள்.

பக்தர்கள் கோயிலுக்கு வரும் முன் அவர்களின் பயண வரலாறு, பக்தர்களுக்கு கோவிட் பரிசோதனை நடத்தப்படும். யாருக்கேனும் கரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்''.

இவ்வாறு திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் தலைவர் ஒய்.வி சுப்பா ரெட்டி, கோயில் நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால், கூடுதல் அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x