

பாஜகவில் இருந்து காங்கிரஸில் இணைந்தவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து. கட்சியின் அதிருப்திக்கு உள்ளாகி இருப்பவர் ஆம் ஆத்மி கட்சிக்கு இழுக்க தேர்தல் நிபுணரான பிரஷாந்த் கிஷோர் பேசிவருவதாகத் தெரிகிறது.
பஞ்சாபில் பிரபல அரசியல்வாதியாகவும் இருப்பவர் சித்து. பாஜகவில் இருந்து வெளியேறியவர், 2017 இல் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸில் இணைந்தார். அப்போது பாஜக எம்எல்ஏவாக இருந்த அவரது மனைவியான நவ்ஜோத் கவுர் சித்து, கணவருக்கு முன்னதாக பதவி விலகி காங்கிரஸில் இணைந்திருந்தார்.
பாஜகவில் இருந்த போது சித்து, பஞ்சாபின் அம்ருத்ஸரின் மக்களவை எம்.பியாக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். காங்கிரஸில் இணைந்த பின் எம்எல்ஏவாகத் தேர்வானவர் அதன் கேபினேட் அமைச்சரானார்.
எனினும், காங்கிரஸின் முதல்வரான கேப்டன் அம்ரீந்தர் சிங்குடன் தொடக்கம் முதல் இருந்த மனஸ்தாபங்களால் தன் அமைச்சர் பதவியை சித்து ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து, சித்து தம்பதிகளுக்கு காங்கிரஸில் இறங்குமுகம் ஏற்பட்டுள்ளது.
இதனால், அதிருப்தியில் இருக்கும் சித்து தம்பதியை ஆம் ஆத்மிக்கு இழுக்க பிரஷாந்த் கிஷோர் வலை விரித்துள்ளார். ஏனெனில், டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மியின் பிரச்சாரப் பொறுப்பை ஏற்றிருந்த பிரஷாந்த் கிஷோர் அதில் ஆட்சியை பிடிக்கவும் காரணமானார்.
இதனால், அடுத்த பஞ்சாப் தேர்தலுக்காகவும் ஆம் ஆத்மி, பிரஷாந்த் கிஷோரிடம் பேசி வைத்துள்ளது. எனவே, அதன் முன்னோட்ட ஏற்பாடுகளில் ஒன்றாக சித்துவை ஆம் ஆத்மிக்கு இழுக்க கிஷோர் பேச்சுவாத்தை தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் பஞ்சாபின் ஆம் ஆத்மி கட்சி வட்டாரம் கூறும்போது, ‘‘அடுத்த
சட்டப்பேரவை தேர்தலில் தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த சித்து நிபந்தனை விதிக்கிறார். இம்மாநிலத்தில் வளர்ந்து வரும் கட்சிக்கு முக்கியக் காரணமாக இருக்கும் பக்வந்த் சிங் மானும், சித்து நம் கட்சியில் இணைவதை விரும்புகிறார்.’’ எனத் தெரிவித்தனர்.
டெல்லியை அடுத்து பஞ்சாபில் ஆம் ஆத்மி வளரும் கட்சியாக உள்ளது. இக்கட்சிக்கு பஞ்சாபின் 117 தொகுதிகளில் 20 பெற்று இரண்டாம் இடத்தை வகிக்கிறது. காங்கிரஸ் 77 பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி செய்கிறது.
இங்கு ஆட்சி செய்த பாஜக மற்றும் சிரோமணி அகாலி தளம் கூட்டணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டது. அகாலி தளத்துக்கு 15 மற்றும் பாஜகவுக்கு 3 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
இந்த தேர்தலில் தன் தேர்தல் பிரச்சாரத்தின் பொறுப்பை ஏற்றிருந்த கிஷோரிடம் மீண்டும் அளிக்க காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால், அதற்கு முன்பாகவே அவர் ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பாளரான அர்விந்த் கேஜ்ரிவாலுடனான நட்பினால் அவரது கட்சிகாக ஒப்புதல் அளித்துள்ளார்.