

மத்திய அரசிடம் சலுகை விலையில் நிலம் பெற்ற தனியார் மருத்துவமனைகள் குறிப்பிட்ட அளவில் கரோனோ நோயாளிகளுக்கு ஏன் இலவசமாக சிகிச்சை அளிக்கக்கூடாது என்று பொதுநல மனு விசாரணை ஒன்றில் உச்ச நீதிமன்றம் இன்று கேள்வி எழுப்பியது.
அதுமட்டுமல்லாமல் மத்திய அரசின் மருத்துவக் காப்பீடான ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தின்படி தனியார் மருத்துவமனைகள் கரோனோ நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கத் தயாராக இருக்கிறார்களா என்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே கேள்வி எழுப்பினார்
நாடு முழுவதும் கரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சையளிக்கும் போது கட்டணங்களை முறைப்படுத்த உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சச்சின் ஜெயின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, ஏ.எஸ். போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. தனியார் மருத்துவனைகள் கூட்டமைப்பு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகல் ரோஹத்கியும், சுகாதார அமைப்புகள் கூட்டமைப்பு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரிஸ் சால்வேயும் ஆஜராகினர். மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகினார்.
இந்த வழக்கின் வாதத்தின்போது, தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர், “மத்திய அரசிடம் இருந்தோ அல்லது மாநில அரசிடம் இருந்தோ சலுகை விலையில் இடம் பெற்ற தனியார் மருத்துவமனைகள் இந்த நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கரோனா நோயாளிகளுக்கு இலவசமாகச் சிகிச்சையளிக்கலாமே?
ஏன் அந்த மருத்துவமனைகள் இலவசமாக சிகிச்சை அளிக்கக் கூடாது. நாங்கள் அனைத்து தனியார் மருத்துவமனைகளிடமும் இந்த கேள்வியை முன்வைக்கவில்லை. பலன்பெற்ற மருத்துவமனைகளிடம்தான் கேட்கிறோம்.
அதுமட்டுமல்லாமல் மத்திய அரசின் மருத்துவக் காப்பீடான, ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டில் வழங்கப்படும் கட்டணத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இயலுமா என்று கேட்கிறோம்” எனக் கேட்டனர்.
அப்போது குறிப்பிட்ட வழக்கறிஞர் ஹரிஸ் சால்வே, “அரசிடம் இருந்து நிலம் பெற்ற தனியார் மருத்துவமனைகள், அப்போது என்ன விதிமுறைகள் வகுத்தார்களோ அதன்படி நடந்துள்ளன” எனத் தெரிவித்தார்.
மூத்த வழக்கறிஞர் முகல் ரோஹத்கி குறுக்கிட்டு, “இது தொடர்பான வழக்கில் ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி தனியார் மருத்துவமனைகள் நடந்துள்ளன” எனத் தெரிவித்தார்.
மனுதாரும் வழக்கறிஞருமான சச்சின் ஜெயின் வாதிடுகையில், “மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் வரையறுக்கப்பட்ட கட்டணத்தையே அனைத்து தனியார் மருத்துவமனைகளும் கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கப் பெற வேண்டும். இந்த நேரத்தில் மத்திய அரசு மக்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டும். தனியார் மருத்துவமனைகள் நலனுக்காகச் செயல்படக்கூடாது” எனத் தெரிவித்தார்.
அப்போது மூத்த வழக்கறிஞர் ஹரிஸ் சால்வே குறுக்கிடுகையில், “ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சிகிச்சைக் கட்டணம் மிகக் குறைவாக இருக்கிறது. கரோனாவால் ஏற்கெனவே தனியார் மருத்துவமனைகளின் வருவாய் 60 சதவீதம் வீழ்ச்சியடைந்துவிட்டது” எனத் தெரிவித்தார்.
மூத்த வழக்கறிஞர் ரோஹத்கி குறுக்கிட்டு, “இந்த இக்கட்டான நேரத்தில் எந்த மருத்துவமனையும் லாபம் ஈட்டும் நோக்கில் செயல்படக்கூடாது” எனத் தெரிவித்தார்.
இதைக் கேட்ட தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு, “உங்கள் எண்ணம் நல்ல காரணத்துக்காக இருப்பது மகிழ்ச்சி. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே ஒரு வழக்கு மற்றொரு அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஆதலால், இந்த வழக்கில் தனியார் மருத்துவமனைகள் தங்கள் விரிவான பதிலை அடுத்த இரு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். மத்திய அரசும் பதிலைத் தாக்கல் செய்ய வேண்டும்” எனக் கூறி ஒத்திவைத்தது.