

செயல் திறன் மிக்க கழிவு மேலாண்மை மூலம் பல்லுயிரைப் பாதுகாக்க முடியும் என மத்திய ஹர்தீப் சிங் பூரி கூறினார்.
உலகச் சுற்றுச்சூழல் தினம் 2020-ஐ ஒட்டி, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை இணையமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, டெல்லியில் நிர்மாண் பவனில் நடந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். செயல் திறன் மிக்க கழிவு மேலாண்மை மூலம் பல்லுயிரைப் பாதுகாத்தல் என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி இணையதளம் மூலம் நேரடியாக நடைபெற்றது.
இதில், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகச் செயலர் துர்காசங்கர் மிஸ்ரா, இணைச்செயலரும், தூய்மை இந்தியா - நகர்ப்புற தேசிய இயக்க இயக்குநருமான வி.கே.ஜிண்டால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தூய்மை இந்தியா நகர்ப்புற இயக்கத்தின் கீழ் செயல்படும் பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பொறியில் அமைப்பு தயாரித்த இந்த மூன்று ஆலோசனைகளில், ‘நகராண்மை திடக்கழிவுக்கான பொருள் மீட்பு வசதிகள் குறித்த ஆலோசனை’, ‘நிலப்பரப்பு மீட்பு குறித்த ஆலோசனை’, ‘ ஆன்-சைட், ஆப்-சைட் கழிவு மேலாண்மை நடைமுறைகள் குறித்த ஆலோசனை ஆவணம்’ ஆகியவை அடங்கும்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர், ‘’இந்த நாளில், பல்லுயிர்ப் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் மிக்க திடக்கழிவு மேலாண்மை ஆகியவை இடையே உள்ள இயற்கையான தொடர்பை மீண்டும் கொண்டுவர நமக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. தூய்மை மற்றும் பல்லுயிர்ப் பாதுகாப்பு கை கோர்த்துச் செயல்பட வேண்டும் ‘’ என்று கூறினார். ‘’தூய்மை இந்தியா நகர்ப்புற இயக்கத்தை பிரதமர் 2014-ஆம் ஆண்டு தொடங்கிய போது, திறந்தவெளிக் கழிப்பிடமற்ற நகர்ப்புற இந்தியாவை உருவாக்குதல், 100% திடக்கழிவு மேலாண்மை ஆகிய இரண்டு நோக்கங்களைக் கொண்டதாக இருந்தது. இந்த இரண்டிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை நாம் அடைந்துள்ளோம்.
நகர்ப்புறங்களில் கிட்டத்தட்ட அனைத்துப் பகுதிகளிலும் இன்று திறந்த வெளிக் கழிப்பிடங்கள் இல்லாமலும், திடக்கழிவை அறிவியல் ரீதியில் நடைமுறைப்படுத்துவதும் நிலவுகின்றன. இந்த இயக்கம் 2014-ஆம் ஆண்டு தொடங்கும்போது, வெறும் 18 சதவீதமாக இருந்த நிலை மாறி தற்போது, மூன்று மடங்குக்கும் அதிகமாக, அதாவது 65 சதவீதமாக உள்ளது. இருப்பினும், இன்னும் வெகு தூரம் போக வேண்டியுள்ளது. முழுமையான சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மைக்கு இடையூறாக உள்ள சில முக்கிய பிரச்சினைகளுக்கு நீடித்த தீர்வு காணுவதைக் கண்டறியும் முயற்சியாக அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள ஆவணங்கள் இருக்கும்‘’ என்று அவர் மேலும் கூறினார்.
‘ மலசுர் – திறந்தவெளி கழிப்பிட அரக்கன்’ எனப்பெயரிடப்பட்டுள்ள மலக்கசடு மேலாண்மை குறித்த தகவல் பிரச்சாரத்துக்கான கையேடும் இன்று அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது. பிபிசி ஊடக நடவடிக்கையின் ஆதரவுடன் கருத்துருவாக்கம் செய்யப்பட்டு பல்வேறு தகவல்கள் அடங்கிய இந்த உபகரணக் கையேடு ஆங்கிலம் மற்றும் 10 இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, ‘ இந்தியாவில் ஆன்-சைட், ஆப்-சைட் கழிவு மேலாண்மை நடைமுறைகளுக்கான வரைவு ஆலோசனை’ என்பது குறித்த மெய்நிகர் கருத்தரங்கு நடைபெற்றது. மாநிலங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகள், கல்வியாளர்கள், இந்த விஷயம் தொடர்பான நிபுணர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.