

மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற இரு வாரங்கள் இருக்கும் நிலையில், குஜராத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மற்றொரு எம்எல்ஏ இன்று தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அந்தக் கடிதம் ஏற்கப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
மோர்பி தொகுதியைச் சேர்ந்த பிர்ஜேஸ் மேர்ஜா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். ஏற்கெனவே நேற்று காங்கிரஸ் கட்சியின் இரு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் இன்று 3-வதாக ஒருவர் ராஜினாமா செய்துள்ளார். கடந்த மார்ச் மாதம் ஏற்கெனவே 5 பேர் அந்தக் கட்சியிலிருந்து ராஜினாமா செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
பிர்ஜேஸ் மேர்ஜா தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதற்கு முன், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகியுள்ளது தெரியவந்துள்ளது
குஜராத் மாநிலத்தில் 4 மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான தேர்தல் வரும் 19-ம் தேதி நடக்கிறது. இதில் பாஜக சார்பில் 3 பேரும், காங்கிரஸ் சார்பில் இருவரும் என 4 இடங்களுக்கு 5 பேர் போட்டியிடுகின்றனர். பாஜக சார்பில் அபய் பரத்வாஜ், ரமிலா பாரா, நர்ஹாரி அமின் ஆகியோரும் காங்கிரஸ் சார்பில் சக்திசின்ஹா கோகில், பரத்சின்ஹா சோலங்கி இருவரும் போட்டியிடுகின்றனர்.
மாநிலங்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து கடந்த மார்ச் மாதத்திலிருந்து 8 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளது அந்தக் கட்சிக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி இரு வேட்பாளர்களை இறக்கியுள்ள நிலையில் ஒரு வேட்பாளர் மட்டுமே வெல்ல முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவையில் ஆளும் பாஜக அரசுக்கு 103 எம்எல்ஏக்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 68 எம்எல்ஏக்கள் உள்ளனர். இரு எம்எல்ஏக்கள் பாரதிய பழங்குடியினக் கட்சிக்கும், சுயேட்சை எம்எல்ஏ ஒருவரும் உள்ளனர். 7 இடங்கள் காலியாக உள்ளன. இரு இடங்கள் நீதிமன்ற வழக்கிலும், 5 இடங்கள் எம்எல்ஏக்கள் ராஜினாமாவால் காலியாக உள்ளன.
இந்த 5 எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கடந்த மார்ச் மாதம் ராஜினாமா செய்தனர். இந்த சூழலில் கடந்த இரு நாட்களில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா செய்திருப்தால், 8 இடங்கள் காலியாக உள்ளன.