Last Updated : 05 Jun, 2020 09:15 AM

 

Published : 05 Jun 2020 09:15 AM
Last Updated : 05 Jun 2020 09:15 AM

யானையைக் கொன்ற வழக்கில் 3 பேரிடம் விசாரணை; திட்டமிட்டு அவதூறு பிரச்சாரம்; மாநிலத்தின் சுய மரியாதை கேள்விக்குள்ளாவதை ஏற்கமுடியாது: பினராயி விஜயன் குற்றச்சாட்டு

கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி அளித்த காட்சி : படம் | ஏஎன்ஐ.

திருவனந்தபுரம்

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் சில்வர் வேலி வனப்பகுதியில் கர்ப்பிணி யானை அன்னாசிப்பழத்தில் வெடிவைத்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் 3 பேரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அதேசமயம், இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி மாநிலத்தின் மரியாதையைச் சிதைக்கும் பிரச்சாரமும் நடக்கிறது என்று முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

பாலக்காடு மாவட்டம், மண்ணார்காடு வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் சுற்றித்திரிந்த கர்ப்பிணிப் பெண் யானைக்கு வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட அன்னாசிப்பழக்கை யாரோ வழங்கியுள்ளனர். அந்த அன்னாசிப்பழத்தை மென்று தின்றபோது அது வெடித்ததில் யானையின் தாடைப்பகுதி பற்கள் உடைந்து சேதமடைந்தன.

இந்தச் சம்பவத்தையடுத்து உணவு சாப்பிடமுடியாமல் வலியுடனும் வேதனையுடனும் சுற்றித்திரிந்த பெண் யானை வெள்ளியாறு ஆற்றில் நின்றநிலையில் கடந்த 27-ம் தேதி உயிரிழந்தது. அந்த யானையைக் காப்பாற்ற வனத்துறையினர் இரு யானைகள் மூலம் முயன்றும் பலனளிக்கவில்லை. அந்த பெண் யானையை வனத்துறையினர் உடற்கூறு ஆய்வு செய்தபோது அந்த யானை ஒரு மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

அன்னாசிப்பழத்தில் வெடிவைத்து யானையைக் கொன்ற சம்பவத்துக்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த தவறைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பாஜக மூத்த தலைவர் மேனகா காந்தி, ஆளுநர் ஆஃரிப் கான் உள்ளிட்டோர் மாநில அரசை வலியுறுத்தியுள்ளனர். ஆனால், மேனகா காந்தி, பிரகாஷ் ஜவடேகர் போன்றோர் சம்பவம் நடந்தது மலப்புரம் மாவட்டம் எனத் தெரிவித்தனர். ஆனால், பாலக்காடு மாவட்டத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

மேலும் பிரபலங்கள், வனவிலங்கு நல ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்களும் இந்தச் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க கேரள வனத்துறையின் வனக்குற்றப்பிரிவு தனிப்படையை அமைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த விசாரணையில் 3 பேர் மீது வலுத்த சந்தேகம் எழுந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, மேலும், இருவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

''யானையைக் கொலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் கண்டுபிடித்து தண்டிக்கப்படுவா்கள். அனைவரும் எழுப்பும் கவலைகள், அக்கறைகள் வீணாகாது. குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். இதுவரை 3 பேர் மீது வலுத்த சந்தேகம் அடைந்து அவர்களை வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், இருவரையும் தேடி வருகிறார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்

யானையை அன்னாசிப்பழத்தில் வெடிவைத்துக் கொன்றது கண்டிக்கத்தது, கொடூரமானதுதான். ஆனால் இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, மாநிலத்தின் நற்பெயரைக் கெடுக்கவும் மலப்புரம் மாவட்டத்தின் பெயரைக் கெடுக்கவும் திட்டமிட்டுப் பிரச்சாரம் நடத்தப்படுகிறது. இதில் மத்திய அமைச்சரே ஈடுபட்டு அறிக்கை விடுகிறார். இது துரதிர்ஷ்டமானது.

இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துகிறேன். சம்பவம் நடந்தது மலப்புரம் மாவட்டத்தில் அல்ல, பாலக்காடு மாவட்டம். ஆனால், மலப்புரம் என்று பிரச்சாரம் செய்யபப்டுகிறது. ஆனால் இந்தத் தவறைச் சரிசெய்ய மத்திய அமைச்சர் கூட தயராக இல்லை. திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்பது தெரிகிறது. இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி வெறுப்பைப் பரப்ப முயற்சிப்பதை சகிக்க முடியாது, ஏற்க முடியாது.

எங்கள் மாநிலத்தின் சுயமரியாதையைக் கேள்வி கேட்பதை ஒருபோதும் ஏற்கமுடியாது. கரோனா வைரஸால் மாநிலம் பாதிக்கப்பட்டுள்ள இந்தநேரத்தில் இவ்வாறு பிரச்சாரம் செய்யப்படுகிறது. தவறு செய்தவர்கள் அதைச் சரிசெய்யத் தயாராக இல்லையென்றால், அது திட்டமிட்டு செய்யும் முயற்சியாகும்''.

இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x