

கேரள மாநிலத்தில் கருவுற்ற யானையை வெடி வைத்து கொன்ற குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்படுவார்கள் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் காட்டு யானை உணவு தேடி கிராமத்துக்கு வந்த நிலையில் யாரோ பட்டாசுகள் மறைத்துவைத்த அன்னாசி பழத்தை உணவாக தந்துள்ளனர். நம்பிக்கையுடன் அன்னாசி பழத்தை வாங்கிய யானை, அதைக் கடித்தபோது அதில் இருந்த பட்டாசு வெடித்துள்ளது. இதில் யானையின்வாய் மற்றும் நாக்கு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயம் ஏற்பட்ட நிலையில் வலியுடன் கிராமத்தின் தெருக்களில் ஓடியபோதும் யானை யாரையும் தாக்கவில்லை. வாயில் ஏற்பட்ட படுகாயத்தால் உணவு உட்கொள்ள முடியாமல் அந்த யானை சில நாட்கள் கழித்து உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இது தொடர்பாக மத்திய வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறும்போது, “வெடி வைத்து யானை கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இது மிகவும் கொடுமையானது. யானையைக் கொன்றது யாராக இருந்தாலும் தப்பிக்க விடமாட்டோம். முழுமையான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்படுவர். உணவில் வெடிமருந்து வைத்து கொலை செய்வது என்பது இந்திய கலாச்சாரம் அல்ல. இதுதொடர்பான முழுமையான அறிக்கையை கேரள அரசிடம் கேட்டுள்ளேன்” என்றார்.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் “யானையை கொன்ற சம்பவத்துக்காக கேரள வனத் துறை செயலரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் கேரள வனத்துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கேரளாவிலிருந்துதான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை” என பதிவிட்டுள்ளார்.
நீதி நிலைநாட்டப்படும்
கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறும்போது, “யானை உயிரிழந்த விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்படும். இது ஒரு துயரமான சம்பவம். தற்போது விசாரணை துரிதமாக நடைபெற்று வருகிறது. யானைக்கு வெடி வைத்ததாக 3 பேர் மீது சந்தேகம் உள்ளது. அவர்களை நோக்கியே விசாரணை உள்ளது. காவல் துறை, வனத் துறை அதிகாரிகள் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும். குற்றம் புரிந்தோர் நீதியின் முன் நிறுத்தப்படுவர்” என்றார்.