கடந்த 8 ஆண்டுகளில் 750 புலிகள் உயிரிழப்பு: ம.பி, மகாராஷ்டிராவில் அதிகம்; தமிழகத்தில் 54 பலி: ஆர்டிஐ மனுவில் தகவல்

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
2 min read

கடந்த 8 ஆண்டுகளில் வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாட்டில் 750 புலிகள் உயிரிழந்துள்ளன. இதில் அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 173 புலிகள் உயிரிழந்துள்ளன என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரியவந்துள்ளது.

750 புலிகள் உயிரிழந்ததில் 369 புலிகள் இயற்கையாக உயிரிழந்துள்ளன. 168 புலிகள் வேட்டையாடப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளன. 70 புலிகள் இறந்தது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. 42 புலிகள் இயற்கைக்கு மாறான காரணங்களால் அதாவது விபத்து, இயற்கைச் சீற்றங்கள் போன்றவற்றால் உயிரிழந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையிலான 8 ஆண்டு காலத்தில் 101 புலிகள் பல்வேறு மாநில வனத்துறை அதிகாரிகளால் பிடிப்பட்டுள்ளன என்று தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (என்டிசிஏ) தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த மனுவில் பதில் அளித்துள்ளது. இந்த மனு பிடிஐ செய்தி நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

2010-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையிலான புலிகள் இறப்பு இல்லாமல், 2012-ம் ஆண்டிலிருந்து 8 ஆண்டுகள் வரையிலான புள்ளிவிவரங்கள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன.

இதில் அதிகபட்சமாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் 173 புலிகள் உயிரிழந்துள்ளன. இதில் 38 புலிகள் வேட்டையாடப்பட்டும், 94 புலிகள் இயற்கையாகவும் இறந்துள்ளன. 19 புலிகள் இறந்தது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. 6 புலிகள் இயற்கைக்கு மாறாக இறந்துள்ளன. 16 புலிகள் வலிப்பால் இறந்துள்ளன. மத்தியப் பிரதேச மாநிலத்தில்தான் அதிகபட்சமாக 526 புலிகள் வாழ்கின்றன.

இரண்டாவதாக மகாராஷ்டிராவில் கடந்த 8 ஆண்டுகளில் 125 புலிகள் உயிரிழந்துள்ளன. அதைத் தொடர்ந்து கர்நாடகாவில் 111 புலிகள், உத்தரகாண்டில் 88 புலிகள், தமிழகம், அசாம் மாநிலத்தில் 54 புலிகள், கேரளா, உத்தரப் பிரதேசத்தில் தலா 35 புலிகள், ராஜஸ்தானில் 17 புலிகள், பிஹாரில் 11, மேற்கு வங்கம், சத்தீஸ்கரில் தலா 10 புலிகள் இறந்துள்ளன.

ஆந்திரா, ஒடிசாவில் 7 புலிகள், தெலங்கானாவில் 5 புலிகள், டெல்லி, நாகாலாந்தில் தலா இரு புலிகள், ஹரியாணா, குஜராத்தில் தலா ஒரு புலி இறந்துள்ளன.

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா, கர்நாடகாவில்தான் வேட்டையாடுதல் மூலம் 28 புலிகள் கொல்லப்பட்டுள்ளன. அசாமில் 17 புலிகள், உத்தரகாண்டில் 14 புலிகள், உத்தரப் பிரதேசத்தில் 12 புலிகள், தமிழகத்தில் 11 புலிகள் வேட்டையாடப்பட்டுக் கொல்லப்பட்டன. கேரளாவில் 6 புலிகளும், ராஜஸ்தானில் 3 புலிகளும் கொல்லப்பட்டுள்ளன.

புலிகளைக் கொன்றவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதற்கு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் பதிலளிக்க மறுத்துவிட்டது. காணாமல் போன புலிகள் குறித்த கேள்விக்கும் சரியான தகவல் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

போபாலைச் சேர்ந்த வனவிலங்கு ஆர்வலர் அஜெய் துபே கூறுகையில், “கடந்த 8 ஆண்டுகளில் வேட்டையாடுதல் மற்ற காரணங்கள் மூலம் புலிகள் அதிக எண்ணிக்கையில் கொல்லப்பட்டது வேதனைக்குரியது. வனவிலங்குகளைக் கொல்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் விதத்தில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

புலிகளைக் காக்க இன்னும் அதிகமான விழிப்புணர்வு தேவை. புலிகளை சுற்றிப்பார்க்கும் சுற்றுலாவைக் குறைத்து அதை சுதந்திரமாக உலவ வழிவகுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ஆனால், கடந்த டிசம்பர் மாதம் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில், “கடந்த 4 ஆண்டுகளில் புலிகள் எண்ணிக்கை 2,226லிருந்து 2,926 ஆக அதிகரித்துள்ளது. நம்முடைய சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறையைப் பார்த்து பெருமைப்பட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in