

கரோனா லாக்டவுனால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஏழைகளுக்கு உடனடியாக நிவாரணத் தொகையை நேரடியாக வழங்கிட வேண்டும், உணவு தானியங்களை இலவசமாக போதுமான அளவு வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 16-ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஃபேஸ்புக் வழியாக நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். கரோனா லாக்டவுனுக்குப் பின் நிருபர்களிடம் முதல் முறையாகப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
''நாட்டின் மதச்சார்பற்ற, ஜனநாயக மற்றும் கூட்டாட்சிக் கட்டமைப்பை மாற்றுவதற்கு ஒரு சாக்காக கரோனா தொற்றுநோயை நரேந்திர மோடி அரசு பயன்படுத்துகிறது. தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளக் கூறி மத்திய அரசு இப்போது மக்களைக் கைவிட்டுவிட்டது.
கரோனா வைரஸை எதிர்த்து மாநில அரசுகள் போராடி வரும் நிலையில், அவர்களுக்குச் சட்டப்படி வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்காமல் தொடர்ந்து மத்திய அரசு மறுத்து வருகிறது. கரோனா வைரஸைப் பயன்படுத்தி மத்திய அரசு தனது அதிகாரத்தைப் பரவலாக்க முயல்கிறது. அரசியலமைப்பின் கூட்டாட்சி முறையின் அடிப்படையைச் சிதைக்கிறது.
மதச்சார்பற்ற இந்திய ஜனநாயக குடியரசைச் சீர்குலைத்து ஆர்.எஸ்.எஸ் அரசியல் திட்டமான கடவுளை அடிப்படையாகக் கொண்ட ஆட்சியாக மாற்றுவதற்கு வசதியாக மோடி அரசாங்கத்தால் ஒரு ஒற்றையாட்சி அரசு உருவாக்கப்படுகிறது.
மொத்த வரி வருவாய் (ஜி.டி.ஆர்) ரூ.70 ஆயிரம் கோடியாகவும், கார்ப்பரேட் வரி வருவாய் (சி.டி.ஆர்) ரூ. ஒரு லட்சத்து 6 ஆயிரம் கோடியாகவும் குறைந்துள்ளது. இந்த வருவாய்க் குறைவு ஏற்கெனவே நிதிப் பற்றாக்குறையால் திணறும் மாநில அரசுகளுக்கு மேலும் அவர்களுக்கும் கிடைக்கும் நிதியின் அளவைக் குறைக்கும்.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட லாக்டவுன் முடிவு தன்னிச்சையாக எடுக்கப்பட்டது. அறிவியல்பூர்வமற்ற வகையில் லாக்டவுன் தளர்த்தப்பட்டு வருகிறது.
வருமான வரி செலுத்தாத பிரிவில் இருக்கும் அனைவருக்கும் உடனடியாக அடுத்த 6 மாதங்களுக்கு ரூ.7,500 வழங்கக் கோரியும், தனிநபர் ஒவ்வொருவருக்கும் அடுத்த 6 மாதங்களுக்கு தலா 10 கிலோ உணவு தானியத்தை இலவசமாக வழங்கக் கோரியும், மகாத்மா ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை 100 நாட்களில் இருந்து 200 நாட்களாக உயர்த்தக் கோரி வரும் 16-ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு நிவாரணத்தொகையும் மத்திய அரசு அறிவிக்க வேண்டும்''.
இவ்வாறு சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.