

உலகின் திறன் மிகுந்த மனிதவளம் கொண்ட நாடாக இந்தியா உருவாவதை யாராலும் தடுக்க முடியாது என்று மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறினார்.
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இது தொடர்பாக அமைச்சர் ரூடி பேசியதாவது:
உற்பத்தி துறையில் சீனா முன்னேறி னாலும் இந்தியாவின் வலிமை அதன் பன் முகத்தன்மை, திறமையான மனித வளம், ஆங்கில மொழித்திறன் ஆகியவற்றில் உள்ளது. திறமையான மனித வளத்தில் உலகின் தலைநகராக உருவெடுக்கும் ஆற்றல் இந்தியாவுக்கு உள்ளது. இதை யாராலும் தடுக்க முடியாது.
தென் கொரியாவில் தொழிலாளர்களில் 96 சதவீதம் பேர் திறன் மிகுந்தவர்களாக உள்ளனர். இது சீனாவில் 46 சதவீதமாகவும் அமெரிக்காவில் 58 சதவீதமாகவும் ஜப்பானில் 80 சதவீதமாகவும் உள்ளது. இந்தியாவில் இது 4.5 சதவீதமாக மட்டுமே உள்ளது.
கல்லூரிப் படிப்பு மட்டுமே வேலைவாய்ப்பை பெற்றுத்தராது. ஆனால் மாணவர்கள் 12 மாதங்களுக்கு பெறும், திறன் மேம்பாட்டுப் பயிற்சி அவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிசெய்யும். இந்த திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு அதிக முதலீடு தேவைப்படுகிறது.
நாட்டில் 70 சதவீத தொழிலாளர்கள் தங்கள் திறன் மேம்பாட்டுக்கு செலவிட முடியாத நிலையில் உள்ளனர். இனி இதற்கான பொறுப்பை அரசு ஏற்கும்.
திறன் மேம்பாட்டுக்காக ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் செலவிட வேண்டியுள்ளது. நாட்டில் 31 கோடி பேருக்கு 5 ஆண்டுகளில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க ரூ.5 லட்சம் கோடி தேவைப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமை யிலான திறன்மிகு இந்தியா திட்டம் நம் நாட்டை மாற்றியமைக்கும். உரிய வகையில் பயிற்சி பெற்றால் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.