மத்திய பாதுகாப்புத் துறை செயலாளருக்கு கரோனா தொற்று; தொழிலாளர் நலத்துறை, சட்டத்துறை இணைச் செயலாளருக்கும் பாஸிட்டிவ்

பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய் குமார் : கோப்புப்படம்
பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய் குமார் : கோப்புப்படம்
Updated on
1 min read

மத்திய பாதுகாப்புத் துறை செயலாளர் அஜய் குமாருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறை செயலாளர் அஜய் குமாரின் உடல்நிலை சீராக இருக்கிறது. அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அஜய் குமாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, நாடாளுமன்றத்தின் தெற்கு வளாகத்தில் அமைந்துள்ள ரெய்ஸானா ஹில்ஸ் பாதுகாப்பு அமைச்சக அலுவலகத்தில் 35 ஊழியர்களும் வீட்டுக்கு அனுப்பப்பட்டு தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து அறிந்ததும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அலுவலகம் வருவதைத் தவிர்த்துவிட்டார். அஜய் குமாருடன் கடந்த வாரத்தில் பேசியவர்கள், கூட்டங்களில் பங்கேற்றவர்கள் அனைவரின் பட்டியலும் எடுக்கப்பட்டு தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள் என பாதுகாப்புத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல மத்திய சட்டத்துறை அமைச்சகத்தில் இணைச் செயலாளருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இணைச் செயலாளருடன் நேரடியாகத் தொடர்பில் இருந்த இரு மூத்த அதிகாரிகள், ஊழியர்களை வரும் 12-ம் தேதி வரை தனிமைப்படுத்திக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து டெல்லி சாஸ்திரி பவனில் இருக்கும் சட்ட அமைச்சகத்துக்கான 4-வது தளம் கிருமிநாசினி தெளிப்புக்காக மூடப்பட்டது. கடந்த மாதம் சட்டத்துறை துணைச் செயலாளருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு அவர் குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும், தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தில் இரு ஊழியர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் அமைந்திருக்கும் ஷாராம் சக்தி பவன் கிருமிநாசினி தெளிப்புக்காக இரு நாட்கள் மூடப்பட்டது. வரும் வெள்ளிக்கிழமை வரை அலுவலகத்தைத் திறக்க வேண்டாம் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

ஷ்ராம் சக்தி பவனில் ஜல் சக்தி துறை, மின்சக்தி துறை அமைச்சகங்கள் செயல்படுகின்றன. ஷ்ராம் சக்தி பவன் மூடப்பட்டதால் அனைத்து ஊழியர்களும் வீட்டிலிருந்து பணியாற்றும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in