

கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட லாக்டவுன் காலத்தில் கடன் பெற்றவர்கள் தவணை செலுத்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதால், வட்டியைத் தள்ளுபடி செய்ய முடியாது. வட்டியைத் தள்ளுபடி செய்தால் வங்கிகளுக்கு ரூ.2.10 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் மத்திய அரசு லாக்டவுனை நடைமுறைப்படுத்தியது. அனைத்துத் தொழில்களும், வர்த்தகமும் முடங்கியதால், வங்கியில் கடன் பெற்றவர்கள் மாதத் தவணையைச் செலுத்துவதில் சிரமம் ஏற்படும் என்பதால் கடன் தவணை செலுத்தும் அவகாசத்தை மார்ச் முதல் மே வரை முதல் 3 மாதங்களும், அதன்பின் அடுத்த 3 மாதங்களும் என ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ரிசர்வ் வங்கி நீட்டித்தது.
இந்நிலையில் டெல்லி ஆக்ராவைச் சேர்ந்த கஜேந்திர சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ''லாக்டவுன் காலத்தில் மாதத் தவணை செலுத்தும் காலத்தை ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது.
ஆனால், அந்தக் காலத்தில் செலுத்தும் வட்டியை ரிசர்வ் வங்கி தள்ளுபடி செய்ய வேண்டும். கடன் தவணையைச் செலுத்தலாம். ஆனால், வட்டியைச் செலுத்துவது கடினம். ஆதலால், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21 வாழும் உரிமை அடிப்படையில் வட்டியைத் தள்ளுபடி செய்ய உத்தரவிட வேண்டும்'' எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ரிசர்வ் வங்கி பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ரிசர்வ் வங்கி சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
ரிசர்வ் வங்கி தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதுவதாவது:
“வங்கியில் கடன் பெற்றவர்கள் லாக்டவுன் காலத்தில் தவணையைச் செலுத்துவதில் சிரமம் இருக்கும் என்பதால் அவர்களுக்கு உதவியாக காலக்கெடு செலுத்த 6 மாதம் அவகாசம் அளித்துள்ளோம். ஆனால், கடனுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்வது இயலாது.
வட்டியைத் தள்ளுபடி செய்தால் வங்கிகளுக்கு ரூ.2.10 லட்சம் கோடி இழப்பு ஏற்படும். ஏறக்குறைய இந்தியப் பொருளாதாரத்தின் ஜிடிபியில் ஒரு சதவீதமாகும்.
இந்த வட்டித் தள்ளுபடியால் வங்கிகளின் நிதிச்சூழலும் பாதிக்கப்படும். வங்கிகளில் நிதிச் சூழல் வலிமையாக இருக்க வேண்டும். லாபத்துடன் செயல்படுவது அவசியம். வங்கியில் டெபாசிட் செய்துள்ள முதலீட்டாளர்களின் நலனையும் காக்க வேண்டும்.
பேரிடர் காலங்களில் இதுபோன்று கடன் தவணை செலுத்த காலக்கெடு வழங்கப்படுவது அவசியம். அதுபோன்று 6 மாதங்கள் அவகாசம் வழங்கியுள்ளோம். இது நிச்சயம் கடன் பெற்றவர்களுக்கு நிவாரணமாக இருக்கும். ஆனால், கடனுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்ய முடியாது”.
இவ்வாறு ரிசர்வ் வங்கி பதில் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு வரும் 5-ம் தேதி (நாளை) மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.