

கடந்த பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலிய பிரதமர் சோக்ட் மோரிஸன்இந்திய பயணம் மேற்கொள்ள இருந்தார். கரோனா வைரஸ் பரவலால் அவரது வருகை ரத்தானது. இதையடுத்து, மோரிஸன் - பிரதமர் மோடி இருவரும் இன்று காணொலியில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
அப்போது, மரியாதை நிமித்தமாக இந்தியாவில் திருடப்பட்டு தற்போது ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பில் உள்ள பழங்கால சிலைகளை ஒப்படைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அவற்றில் வெளிர் சிகப்பு நிற மணற்கல்லால் ஆன நாகராஜா சிலையும் உள்ளது. இது, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளை 6 முதல் 8-ம் நூற்றாண்டு வரை ஆண்ட பிரத்திஹாரா வம்சத்தை சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.
இது தவிர கருங்கல்லில் செதுக்கப்பட்ட 2 துவாரக பாலா சிலைகளும் தமிழகத்தின் 15-ம் நூற்றாண்டை சேர்ந்தவை. திருநெல்வேலி மாவட்டம் ஆத்தாநல்லூர் கிராமத்தின் மூண்டீஸ்வரர் உடையார் கோயிலின் கருவறையில் இருந்தவை. இந்த சிலைகள் கடந்த1995-ம் ஆண்டில் திருடப்பட்டதாக அப்பகுதியின் வீரவநல்லூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவாகி உள்ளது.
சிலை கடத்தல் குற்றவாளியான சுபாஷ் கபூர் மூலமாக இந்த சிலைகள் ஆஸ்திரேலியாவுக்குக் கடத்தப்பட்டு விற்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் டெல்லியில் உள்ள இந்திய தொல்லியல் துறை தலைமை அலுவலக வட்டாரம் கூறும்போது, ‘‘பிப்ரவரியில் ஒப்படைக்கப்பட இருந்த 3 சிலைகளும் ஜனவரியிலேயே இந்தியா கொண்டு வரப்பட்டு எங்கள் அலுவலகத்தில் பாதுகாத்துவைக்கப்பட்டுள்ளன.
இவை அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படவில்லை. அதனால் இன்னும் ஆஸ்திரேலிய நாட்டின் பொறுப்பில் உள்ளன. ஜூன் 4-ம் தேதி(இன்று) இரு நாட்டுத் தலைவர்களும் காணொலியில் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுவிடும்’’ என்று தெரிவித்தனர்.