

மனைவி அளித்த புகாரின் பேரில் டெல்லி மாநில முன்னாள் சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி மீது போலீஸார் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்துள்ளனர்.
இருப்பினும், அவர் உடனடியாக கைது செய்யப்பட வாய்ப்பு ஏதும் இல்லை எனத் தெரிகிறது.
தன்னை அடித்து உதைத்ததாகவும், மன ரீதியாக கொடுமைப் படுத்தியதாகவும் டெல்லி முன்னாள் அமைச்சரும் ஆம் ஆத்மி எம்எல்ஏவு மான சோம்நாத் பாரதி மீது அவரது மனைவி லிபிகா பாரதி டெல்லி மகளிர் ஆணையத்தில் கடந்த ஜூன் மாதத்தில் புகார் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து இருவருக்கும் இடையே சமரசம் முயற்சிகள் நடைபெற்றன. 4 முறை இருவரையும் அழைத்து ஆலோசனை வழங்கப்பட்டது. ஆனால் அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இந்நிலையில், லிபிகா நேற்று (புதன்கிழமை) துவாரகா வடக்கு காவல்நிலையத்தில் தனது கணவர் சோம்நாத் பாரதி மீது புகார் கொடுத்தார்.
இது குறித்து போலீஸ் இணை ஆணையர் தீபேந்திர பதக் கூறும்போது, "ஆம் ஆத்மி எம்.எல்.ஏ சோம்நாத் பாரதி மீது அவரது மனைவி புகார் கொடுத்துள்ளார். வரதட்சனை கொடுமை, கொலை முயற்சி, வயிற்றில் உள்ள கருவை கலைக்க முயற்சி, நாய்களை ஏவி துரத்தி கொடுமை செய்தது, திருமணத்துக்கு முன்னர் தவறான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றியது ஆகிய குற்றச்சாட்டுகளை சோம்நாத் மீது லிபிகா தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், சோம்நாத் பாரதியை உடனடியாக கைது செய்ய வாய்ப்பில்லை. லிபிகா கொடுத்த புகார்கள் குறித்து ஆராய வேண்டியுள்ளது. அதன்பிறகே உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.