

அரபிக்கடலில் உருவெடுத்து நிசர்கா புயல் மும்பை அருகே அலிபாக் பகுதியில் கரையை கடந்த நிலையில் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் நிலவும் “நிசர்கா” புயல், கடந்த 6 மணிநேரத்தில் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்துள்ளது. ஜூன் 3, 2020, இன்று காலை இந்திய நேரப்படி, 08-30 மணி நிலவரப்படி, கிழக்கு மத்திய அரபிக்கடலில் 17.6°N அட்சரேகை மற்றும் 72.3°E தீர்க்கரேகை அருகே, அலிபாக்கிலிருந்து ( மகாராஷ்டிரா) தெற்கு – தென்மேற்கு திசையில் 130 கிலோ மீட்டர் தொலைவிலும், மும்பையிலிருந்து (மகாராஷ்டிரா) தெற்கு-தென்மேற்கில் 170 கிலோமீட்டர் தொலைவிலும், சூரத்-திலிருந்து (குஜராத்) தெற்கு-தென்மேற்கில் 400 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.
இது வடக்கு-வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, வடக்கு மகாராஷ்டிரா கடலோரம் அலிபாக்-கின் தென்பகுதியில் (ராய்காட் மாவட்டம், மகாராஷ்டிரா) தீவிர சூறாவளிப் புயலாக இன்று பிற்பகலில் கரையைக் கடக்க தொடங்கியது. 3 மணி நேரத்திற்கும் மேலாக புயல் கரையை கடந்தபோது அதிகபட்சம், மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் முதல் 120 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசியது.
மும்பைக்கு அருகே கரையை கடந்ததால் சேதம் ஏற்படக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சிகப்பு எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து மும்பை விமான நிலையம் மூடப்பட்டது. டாப்லர் வானிலை ரேடார்கள் மூலம் தொடர்ந்து மும்பை கண்காணிக்கப்பட்டு வருகிறது. மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.