Published : 03 Jun 2020 11:54 AM
Last Updated : 03 Jun 2020 11:54 AM

கேரளாவில் கரோனா சிகிச்சையில் இருந்த பாதிரியார் மரணம்: சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா தகவல்

கேரளத்தில் கரோனா தொற்றுக்கு ஆளாகி திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாலாஞ்சிரா பகுதியைச் சேர்ந்த பாதிரியார் வர்கீஸ் என்பவர் உயிரிழந்ததாக கேரள சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் கரோனா தொற்று பரவல் குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா திருவனந்தபுரத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

‘கேரளத்தில் நேற்று புதிதாக 86 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 46 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 26 பேர் வெளி மாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள். எஞ்சியவர்களுக்கு கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவியுள்ளது. பாலக்காட்டில் சுகாதாரத் துறை பெண் ஊழியருக்கு நோய்த் தொற்று பரவியுள்ளது.

கரோனா சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திருவனந்தபுரம் நாலாஞ்சிரா பகுதியைச் சேர்ந்த பாதிரியார் வர்கீஸ் (77) மூச்சுத் திணறல் ஏற்பட்டு நேற்று மரணமடைந்தார். நேற்று 19 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இதையும் சேர்த்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 627ஆக உயர்ந்துள்ளது. தற்போது 774 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரளத்துக்கு இதுவரை வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து 1,43,989 பேர் வந்துள்ளனர். வெளிநாடுகளிலிருந்து விமானங்கள் மூலம் 25,832 பேரும், கப்பல் மூலம் 1,621 பேரும், வெளிமாநிலங்களிலிருந்து சாலை வழியாக 1,06,218 பேரும், ரயில்கள் மூலம் 10,318 பேரும் வந்துள்ளனர்.

கேரளத்தில் பல்வேறு மாவட்டங்களில் 1,45,670 பேர் வீடுகளிலும், 1,340 பேர் மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் உள்ளனர்.

புதிதாக கரோனா அறிகுறிகளுடன் 200 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 2,421 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கேரளத்தில் தற்போது நோய்த் தீவிரம் உள்ள ஹாட் ஸ்பாட் பகுதிகளின் எண்ணிக்கை 122 ஆக உள்ளது.’

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x