Last Updated : 03 Jun, 2020 07:07 AM

 

Published : 03 Jun 2020 07:07 AM
Last Updated : 03 Jun 2020 07:07 AM

அமைச்சர், மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்டு எடியூரப்பாவுக்கு எச்சரிக்கை: கர்நாடக பாஜகவில் உட்கட்சி மோதல் நெருக்கடி

கர்நாடகாவில் அமைச்சர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிவழங்கக் கோரி பாஜக மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் முதல்வர் எடியூரப்பாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 4 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் பாஜக சார்பில் இருவரும், காங்கிரஸ், மஜத சார்பில் தலா ஒருவரும் தேர்வு செய்யும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் பாஜக மூத்த தலைவர்கள் உமேஷ் கத்தி, எச்.விஷ்வநாத் உள்ளிட்டோர் தங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் எனக் கூறி போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

லிங்காயத்து வகுப்பைச் சேர்ந்தஉமேஷ் கத்தி நேற்று முன் தினம் இரவு தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேரை அழைத்து இரவு விருந்து அளித்தார். பாஜக எம்எல்ஏக்கள் சிவராஜ் பாட்டீல், பசனகவுடா பாட்டீல் யத்னால், பாலசந்திர ஜார்கிஹோளி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். அப்போது உமேஷ் கத்தி, தனக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியானது.

அதே வேளையில், பாஜக எம்எல்ஏக்கள் பசனகவுடா பாட்டீல் யத்னால், பாலசந்திர ஜார்கிஹோளி ஆகிய இருவரும் தங்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பசனகவுடா பாட்டீல் யத்னால் கூறுகையில், ''நான் மத்திய அமைச்சராக பணியாற்றியவன். முதல்வர் பதவிக்கே தகுதியானவன். இதுகட்சி மேலிடத்துக்கும் தெரியும். இருப்பினும், எனக்கு துணை முதல்வர் பதவிக் கூட கொடுக்கவில்லை. எடியூரப்பா அமைச்சரவையில் வட கர்நாடகாவை சேர்ந்தவர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. எனவே, வடகர்நாடகாவைச் சேர்ந்த 4 பேருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்க வேண்டும். இல்லையெனில், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்''என பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x