Published : 03 Jun 2020 06:28 AM
Last Updated : 03 Jun 2020 06:28 AM

சீனாவின் செயலிகளை நீக்க உதவும் ‘ரிமூவ் சைனா ஆப்’க்கு இந்தியாவில் வரவேற்பு- 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம்

செல்போனில் சீன செயலிகளை (ஆப்) நீக்க உதவும் ‘ரிமூவ் சைனாஆப்’ என்கிற புதிய செயலியை சில நாட்களிலேயே 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தியாவில் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் இருந்து கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. தற்போது கடந்த 2 வாரங்களாக இந்திய எல்லைப் பகுதிகளில் சீனா தனது படைகளைக் குவித்து பதற்றத்தை உருவாக்கி உள்ளது. இதனால் சீனா மீது உலக நாடுகள் கடும் கோபத்தில் உள்ளன. இந்தச் சூழ்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த ஒரு தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனம், பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் இருந்து சீன செயலிகளை (ஆப்) நீக்க உதவும் நோக்கில் ஒரு செல்போன் செயலியை அறிமுகப்படுத்தியது.

ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து சீன செயலிகளையும் ஒரே கிளிக் மூலம் அகற்ற உதவும் ஒரு செயலி, கூகுள் பிளே ஸ்டோரில்கிடைக்கிறது. அந்த செல்போன் செயலிக்கு ‘ரிமூவ் சைனா ஆப்ஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதைத்தான் அந்த ஜெய்ப்பூர் நிறுவனம் உருவாக்கி உள்ளது.

இந்தச் செயலி அறிமுகம் செய்யப்பட்ட 2 வாரங்களிலேயே 50 லட்சத்துக்கும் அதிகமானோர் இதை பதிவிறக்கம் செய்துள்ளனர்.மேலும் இது சீனாவில் இருந்து வரும் நிறுவனங்களுக்கு சொந்தமான செயலிகளைக் கண்டறிந்து அதை நீக்குவதற்கான வழியை எளிமைப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவுக்கு எதிராக எல்லையில் சீனா பிரச்சினைகளை ஏற்படுத்தி வருவதால் பெரும்பாலான இந்தியர்கள் இதை பதிவிறக்கம் செய்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. சீனாவுக்கு எதிரான இந்தியர்களின் மனநிலையை இது பிரதிபலிப்பதாக உள்ளது என்கின்றனர். இந்த செல்போன் செயலி இந்தியாமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவிலும் பிரபலமாகி வருகிறது.

தற்போது இந்த செயலி கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் இலவச செயலிகள் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. செல்போனில் பதிவிறக்கம் செய்யப்பட்ட பின்னர் பயனர் விரும்பும் பட்சத்தில் தேவையற்ற செயலிகளை ரிமூவ் சைனா ஆப்ஸ் செயலியில் இருந்தபடியே அவற்றை அன்-இன்ஸ்டால் செய்ய முடியும். தற்போது இந்த செயலிக்கு பயனர்கள் 4.8 நட்சத்திர குறியீடுகளை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செயலி கூகுள் பிளே ஸ்டோர் அல்லது மூன்றாம் தரப்புஆப் ஸ்டோர்களில் இருந்து குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களில் இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலிகளை மட்டுமே கண்டறிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x