Published : 02 Jun 2020 10:50 PM
Last Updated : 02 Jun 2020 10:50 PM

திரையரங்குகள் திறப்பு எப்போது?- திரை துறையினருடன் மத்திய அமைச்சர் சந்திப்பு

திரைப்பட தயாரிப்பாளர்கள், திரைப்படக் காட்சியாளர் சங்கங்கள், திரைத்துறைப் பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சந்தித்து பேசினர்.

திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரைப்படக் காட்சியாளர் சங்கங்கள் மற்றும் திரைத்துறைப் பிரதிநிதிகளை, மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று காணொலி மாநாடு மூலம் சந்தித்து உரையாடினார்.

இந்தச் சங்கங்கள் மற்றும் பிரதிநிதிகள் அனுப்பிய கோரிக்கைகளை அடுத்து கோவிட்-19 காரணமாக திரைத்துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக இந்தக் கூட்டத்தை அமைச்சர் கூட்டியிருந்தார்.

திரையரங்குகளில் திரைப்படத்தைக் காண்பதற்கான சீட்டுகளை விற்பனை செய்வதன் மூலம் மட்டுமே நாளொன்றுக்கு முப்பது கோடி ரூபாய் வருமானம் தருகின்ற 9500 திரையரங்குகள் இந்தியாவில் உள்ளன என்பதை அமைச்சர் கூறினார்.

திரைத்துறையின் குறிப்பிட்ட கோரிக்கைகள் குறித்து விவாதித்த ஜவடேகர் பெரும்பாலான கோரிக்கைகள் -- ஊதிய மானியம், மூன்று ஆண்டுகளுக்கான வட்டியில்லாக் கடன், வரிகள் மற்றும் தீர்வைகளில் இருந்து விலக்கு, மின்சாரத்திற்கான குறைந்தபட்சக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்தல், தொழில் துறைக்கான மின்சாரம் என்ற வகையில் மின்சாரக் கட்டணம் வசூலிப்பதில் இருந்து தள்ளுபடி போன்ற நிதி நிவாரண வகையிலானதாகவே உள்ளது என்றார்.

அவர்களது பிரச்சினைகள் குறித்து தேவையான நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுடன் விவாதிக்கப்படும் என்று அமைச்சர் கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகளுக்கு உறுதியளித்தார்.

திரைப்படம் தயாரிப்பது தொடர்பான பணிகளை மீண்டும் தொடங்குவது குறித்துப் பேசுகையில், இது குறித்த நிலையான இயக்க வழிமுறைகள் அரசால் வெளியிடப்படும் என்றார். திரையரங்குகளைத் திறக்க அனுமதி அளிக்கவேண்டும் என்ற கோரிக்கை குறித்துப் பேசிய அமைச்சர், கோவிட்-19 பெருந்தொற்று ஜூன் மாத காலத்தில் உள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு, இது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்று பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x