

அரபிக்கடலில் நிசர்கா புயல் உருவாகியுள்ள நிலையில் மீட்பு மற்றும் அவசரகால நடவடிக்கைக்கு மேற்கு பகுதி கடலோர காவல்படை தயாராகி வருகிறது.
இயற்கைப் பேரிடர்கள் மற்றும் தற்செயலாக நேரும் இதர நிகழ்வுகளில் பாதிக்கப்படும் மக்களுக்குத் தேவைப்படும் மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை வழங்குவதில் இந்தியக் கடற்படை முன்னணியில் இருந்து வந்துள்ளது.
இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பருவமழை வலுத்துவரும் நிலையில், மேற்குக் கடற்படை கமாண்ட் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து வருகிறது. அதிகமாக மழை பெய்தால், ஏற்படும் வெள்ளம் காரணமாக, நகர்ப்புறம் மற்றும் கிராமப் பகுதிகளில் வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மேற்குக் கரை மாநில அரசுகளின் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளத் தேவையான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
அரபிக்கடலில் நிசர்கா புயல் வலுவடைந்து வருவதையொட்டி, அது தாக்கும் போது ஏற்படும் பாதிப்பின் தேவைக்கு ஏற்ப, மனிதநேய உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து குழுக்களும் முன்னேற்பாடாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மும்பையில், மகாராஷ்டிரா கடற்படைப் பகுதியில், பருவமழைக் காலம் முழுவதும், ஐந்து மீட்புக் குழுக்கள் மற்றும் மூன்று நீச்சல் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்படும். பாதிப்பு ஏற்படும்போது, உடனடி நடவடிக்கைகளுக்காக, இந்தக் குழுக்கள் நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
அரபிக்கடலில் நிசார்கா புயல் வலுவடைந்து வரும் நிலையில், அனைத்து குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. புயல் சமயத்தில் தேவை ஏற்படும் இடங்களில், மனித நேய உதவிகள், பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில் இந்தக் குழுக்கள் ஈடுபடும்.