

அரபிக்கடலில் புயல் உருவாகி வரும் நிலையில் மேற்கு மாநிலங்களில் உள்ள மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை நீண்டகால அடிப்படையில் 107 சதவீதம் என்ற அடிப்படையில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தென்கிழக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதி மற்றும் அதையொட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவானது. இது வலுவடைந்து புயலாக உருவெடுத்துள்ளது.
இந்த புயலுக்கு நிசர்கா எனப் பெயரிடப்பட்டுள்ளது. தற்போது அரபிக் கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசையில் 11 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இதுகுறித்து பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறுகையில் ‘‘இந்தியாவின் மேற்கு கடற்பகுதியில் உருவாகி வரும் புயலால் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரும் நலமுடன் இருக்க பிராதிப்போம். அந்த பகுதி மக்கள் போதிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.