ஆந்திர முன்னாள் முதல்வர் ஜனார்த்தன ரெட்டி காலமானார்

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜனார்த்தன ரெட்டி காலமானார்
Updated on
1 min read

மூத்த காங்கிரஸ் தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான ஜனார்த்தன ரெட்டி காலமானார். அவருக்கு வயது 80. நிசாமஸ் மருத்துவ கழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு மனைவியும் 4 மகன்களும் உள்ளனர்.

ஜனார்த்தன ரெட்டி சில காலமாகவே உடல் நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். கல்லீரல் நோய் காரணமாக சில தினங்களாக நிசாமஸ் மருத்துவ கழகத்தில் சிகிச்சையும் பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று காலை இறந்தார். அவரது உடல் சோமாஜிகுட்டாவில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

நெல்லூரில் பிறந்த ஜனார்த்தன ரெட்டி 1990 - 1992 காலகட்டத்தில் ஆந்திர முதல்வராக இருந்தார். மக்களவைக்கு மூன்று முறை தேர்வு செய்யப்பட்டார். ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் பணியாற்றினார். அவரது மனைவி ராஜலட்சுமியும் அமைச்சராக இருந்தார்.

ஜனார்த்தன ரெட்டி ஆந்திர முதல்வராக இருந்த போதுதான் மாநிலத்தில் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகள் நடத்த தனியாருக்கும் அனுமதி வழங்கப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in